'Corse' தீவுப்பகுதிக்கு செல்லும் பயணிகள் அவதானம்! 'noro' வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.
1 ஆவணி 2024 வியாழன் 08:42 | பார்வைகள் : 3014
மத்தியதரைக் கடலில் நான்காவது பெரிய தீவாக விளங்கும் 'Corse' தீவில்
355,528 மக்கள்தொகையயினர் வாழ்கின்றனர், பிரான்சின் 18 பிராந்தியங்கள் அடங்கிய குறித்த தீவானது உல்லாசப் பயணிகள் மற்றும் மலையேறும் விளையாட்டு வீரர்களின் விருப்பத்திற்குரிய பகுதியாக விளங்குகிறது. கோடைகால விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைகள், மலைகள் அடங்கிய ஒரு அழகான தீவாகவு Cores என்பதால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் இன்றைய நிலையில் அங்கு படை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் Cores பிராந்திய சுகாதார நிறுவனம் ஒரு அவதான அறிவித்தலை இன்று விடுத்துள்ளது, தீவில் இரைப்பை குடல் அழற்சி நோயை ஏற்படுத்தும் 'noro' வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது எனவும், மக்கள் மிகுந்த சுகாதாரத் தன்மைகளை கடைப்பிடித்து அவதானமாக இருக்கும் படியும் தெரிவித்துள்ளது.நேற்றிரவு அங்கு தங்கியிருந்த சுமார் பதினைந்து இளைஞர்கள் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் E Capanelle தங்குமிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார மையம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு வாரங்களில் 250க்கும் மேற்பட்ட மக்கள் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து சுகாதார மையம் விடுத்துள்ள அறிவித்தல் ஒன்றில் "மக்கள் பீதியடைய வேண்டாம், ஆனால் சுகாதார விதிகளை மதியுங்கள், உணவு தயாரிப்பதற்கு முன் அல்லது கழிப்பறைக்குச் சென்ற பிறகு, உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள், அதேபோல் இயற்கையிலிருந்து வரும் தண்ணீரை முதலில் வடிகட்டாமல் குடிக்க வேண்டாம் தண்ணீரைக் குடிப்பதற்கு முன் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்துங்கள்,கழிப்பறைகள் மற்றும் நடைபயணிகள் அடிக்கடி தொடும் கதவு கைப்பிடிகள் மற்றும் ஒளி சுவிட்சுகள் போன்ற அனைத்து பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளது.
மேலும் நோய் தாக்கம் ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டாம் எனவும், 15 இலக்கத்திற்கு அழைத்து அவர்களின் ஆலோசனையின் பின்னரே மருத்துவமனைக்கு செல்லுமாறும்,நோய் தாக்கம் அதிகமாக இருந்தால் அவர்களே உங்களை உலங்குவானூர்தி மூலமோ, நோயாளர் காவுவண்டி மூலமோ மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வார்கள் எனவும் அறிவித்துள்ளது.