ஜாதியவாத பித்துநிலை உளவியல் தலித்துகளிடம் பரவுவது வேதனை
3 ஆவணி 2024 சனி 03:42 | பார்வைகள் : 1282
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வாலிபர் முகமது ஆஷிக் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ''ஆதிக்க ஜாதியவாதக் கும்பலின், 'பித்துநிலை உளவியல்' தற்போது தலித்துகளிடையேயும் பரவுவது வேதனைக்குரியது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில், ஒரு சமூக விரோத கும்பல் நுழைந்து, அங்கே பணியாற்றிய முகமது ஆஷிக் என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
படுகொலையை திட்டமிட்டவர்கள், கொலையாளிகளை ஏவியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து, குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். எங்கள் கட்சி முக்கிய தலைவர்கள் படுகொலையான முகமது ஆஷிக் குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறினர். ஆறுதல் நிதியாக 50,000 ரூபாய்- வழங்கியுள்ளனர்.
மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ள ஜாவித் குடும்பத்தினருக்கு நீதி கிட்டும் வரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சார்ந்த இயக்க முன்னோடிகள், அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுகிறேன்.
இதுபோன்ற ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆதிக்க ஜாதியவாதக் கும்பலின், 'பித்துநிலை உளவியல்' தற்போது தலித்துகளிடையேயும் பரவுவது வேதனைக்குரியது. இப்போக்கைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.