Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்: ராகுல் சர்ச்சை பேச்சால் லோக்சபாவில் அமளி

பா.ஜ., ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்: ராகுல் சர்ச்சை பேச்சால் லோக்சபாவில் அமளி

1 ஆடி 2024 திங்கள் 11:22 | பார்வைகள் : 424


பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல'' எனப்பேசிய ராகுலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது.

லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சிவபெருமான், இயேசு, குருநானக் உள்ளிட்ட படங்களை காண்பித்து பேசினார். அவையின் விதிப்படி எந்தவொரு மத கடவுளின் படத்தையும் காண்பிக்க கூடாது என பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் பேசியதாவது:

சிவபெருமானுடன் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. நாம் அனைவரும் பிறக்கிறோம், இறக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி பயாலஜிக்கலாக பிறக்காதவர்.


ஹிந்துக்கள் அல்ல


பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி, அகிம்சையை பற்றிதான் பேசுகின்றன. பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல. ஹிந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. பா.ஜ., 24 மணி நேரமும் வன்முறை, வெறுப்பு ஆகியவவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஹிந்து மதம் அகிம்சையை போதிக்கிறது; வெறுப்பை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.


மோடி பதிலடி


இடைமறித்த பிரதமர் மோடி, ''ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மீதான தாக்குதல். ஹிந்துக்களை வன்முறையாளராக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்'' எனக் கண்டனம் தெரிவித்தார்.
லோச்சபாவில் ஒருவர் பேசும்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு பேசுவது இதுவே முதல்முறை.
பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்களை கர்வமுடன் ஹிந்துக்கள் என கூறி வருகின்றனர். ராகுல் தனது பேச்சுக்கு இந்த அவையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் தேசத்தையே சிறையில் அடைத்தவர்களுக்கு அபயத்தை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.

டில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் காங்., ஆட்சி காலத்தில் தான் படுகொலை செய்யப்பட்டனர். அவையை இப்படி நடத்த முடியாது, ராகுலுக்கு விதி தெரியவில்லை என்றால், விதியை பற்றி அவருக்கு டியூஷன் நடத்துங்கள். படத்தை காட்டக்கூடாது என்று தெரிவித்த பிறகு மீண்டும், மீண்டும் அவர் இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


மன்னிப்பு


ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தினர். அப்போது மீண்டும் சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதுடன், அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.,க்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், ''அயோத்தியில் ராமர் பிறந்த மண்ணிலேயே பா.ஜ.,விற்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது'' என்றார். ராகுலின் பேச்சின்போது இடையிடையே மைக் அணைக்கப்பட்டதால், 'மைக் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது? அயோத்தி என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டுவிட்டது.' என ராகுல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், ''நீங்கள் பேசுவதற்கு எழும்போது ஒருபோதும் உங்களுடைய மைக்க அணைக்கப்படுவதில்லை. இதே நடைமுறைதான் பழைய பார்லி.,யிலும் சரி, புதிய பார்லி.,யிலும் சரி'' என பதிலளித்தார்.


அயோத்தியில் மோடி


தொடர்ந்து ராகுல் பேசியதாவது: அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என மோடி 2 முறை முயற்சி செய்தார். ஆனால், அயோத்தியில் போட்டியிட வேண்டாம், மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என கணிப்பாளர்கள் எச்சரித்தனர். பிரதமர் மோடி பா.ஜ., எம்.பி.,க்களையே பயமுறுத்தும் விதமாக இருக்கிறார்.

ராமர் கோயில் திறந்துவைக்கப்பட்டபோது அம்பானி, அதானி மட்டுமே அங்கு இருந்தனர்; சிறு வியாபாரிகளை தெருவில் வீசினர். அயோத்தி மக்களின் நிலத்தை பறித்துவிட்டனர்; வீடுகளை இடித்து விட்டனர். கோயில் திறப்பு விழாவில் அங்குள்ள மக்கள் கூட வரவில்லை. அதனால் தான் அயோத்தி மக்கள் பா.ஜ.,விற்கு நல்ல தீர்ப்பை அளித்தனர். இவ்வாறு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி எழுந்து, ''அரசியலமைப்பு சட்டம் எதை சொல்கிறதோ அதன்வழியில் நடக்கிறேன். எதிர்க்கட்சி தலைவரை நான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயகமும், அரசியல் சாசனமும் எனக்கு கற்பித்து இருக்கிறது. ஜனநாயகத்தை பற்றியும், அரசியல் சாசனத்தை பற்றியும் ராகுலுக்கு கற்பிக்க வேண்டும்'' என்றார்.

நீட் தேர்வு
தொடர்ந்து, ராகுல் பேசியதாவது: பணம் படைத்தவர்களுக்கான தேர்வாக நீட் அமைந்துவிட்டது. நீட் தேர்வின் மூலம் மருத்துவக்கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. தொழில்முறை தேர்வுகளை எல்லாம் நீங்கள் வணிகமுறை தேர்வுகளாக ஆக்கிவிட்டீர்கள். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. காங்., உங்களை கண்டு பயப்படவில்லை. ஆனால் நீங்கள் காங்கிரசை பார்த்து பயப்படுகிறீர்கள். நீட் தேர்வில் ஒருவர் 'டாப்பர்' ஆக வரமுடியும். ஆனால், அவரிடம் பைசா இல்லையென்றால் மருத்துவம் படிக்க முடியாது.

ஒருநாள் விவாதம்
இது பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. இத்தேர்வின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டுகிறீர்கள். நீட் தேர்வு குறித்து ஜனாதிபதி உரையில் ஒரு வார்த்தைக்கூட இடம்பெறவில்லை. நீட் பற்றி ஒருநாள் விவாதம் நடைபெற வேண்டும். நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஆண்டு கணக்கில் தயாராகி வருகின்றனர். மாணவர்களுக்கு, குடும்பத்தினர் பண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தேவையான ஆதரவை வழங்குகின்றனர். ஆனால் மாணவர்கள் இன்று நீட் தேர்வை நம்ப முடியாத சூழல் தான் நிலவுகிறது.

பிரதிநிதித்துவம்
இந்த தேர்வு பணக்கார மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. நான் எதிர்க்கட்சி தலைவரான பிறகு இதுவரை உணராத சிலவற்றை உணர்ந்தேன். காங்கிரசை மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொரு எதிர்க்கட்சியையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறையை ஏவி விடும்போதும் அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை.

தலை குனியக்கூடாது
நீங்கள் சபாநாயகர் இருக்கையில் அமரும்போது பிரதமரும், நானும் கை கொடுத்தோம். நான் கை கொடுக்கும்போது விரைப்பாக அமர்ந்து கை கொடுத்தீர்கள், ஆனால் பிரதமர் கை கொடுக்கும் போது குனிந்து கொண்டு கை கொடுத்தீர்கள். சபாநாயகர் யாருக்கும் தலை குனியக்கூடாது. இந்த அவையில் சபாநாயகரை விட பெரியவர் யாரும் இல்லை.அவை தலைவரையே புகார் தெரிவிப்பதாக அமித்ஷா குற்றம்சாட்டினார். இவ்வாறு ராகுல் பேசினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்