Paristamil Navigation Paristamil advert login

டொலர் கொண்டுவரும் இலங்கை தேயிலை எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து வருவதற்கான தீர்வுகள் என்ன? 

டொலர் கொண்டுவரும் இலங்கை தேயிலை எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து வருவதற்கான தீர்வுகள் என்ன? 

1 ஆடி 2024 திங்கள் 12:54 | பார்வைகள் : 139


1972 ஆம் ஆண்டு அப்போதைய  அரசாங்கம் சகல தோட்டங்களையும் அரசாங்கமயமாக்கியது.   1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கமே தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தியது.  1992 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியது.   கடந்த 32 வருடங்களாக தனியார் துறையினர் அதிக அளவில் தோட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 22 தனியார் கம்பெனிகள் தற்போது இலங்கையில் இந்த தேயிலை தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து நடத்துவதுடன் இவற்றில் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.    அரசாங்கமும் இன்னும் சில நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கின்றது. மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்த சபை என்ற பெயரில் ஒரு அரசாங்க நிறுவனம் பெருந்தோட்டங்களை நடத்துகிறது. அதேபோன்று அரசின் சார்பில் எல்கடுவ பிளாண்டேஷன் என்ற நிறுவனமும் தோட்டங்களை நிர்வகிக்கின்றது.   இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம் என்ற   பெயரிலும் அரசாங்கம் ஒரு பெருந்தோட்ட நிறுவனத்தை நடத்துகின்றது.  இந்த மூன்று அரச நிறுவனங்களின் கீழும்   8000 அளவில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.    
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி உலகின் தேயிலை உற்பத்தி கடந்து சில வருடங்களாக அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. 3.2 வீதத்தினால் தேயிலை உற்பத்தி அதிகரித்து இருக்கின்றது.  2022 ஆம் ஆண்டில் உலகில் 6.7 மில்லியன் டொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தப் புள்ளிவிபரத்தின்படி தற்போதைய சூழலில் பிளாக் தேயிலை உற்பத்தி அதிகமாக இருக்கின்றது. கிரீன் தேயிலை  உற்பத்தி குறைவாக இருக்கின்றது. ஆனால் 2032 ஆம் ஆண்டாகும்போது கிரீன் தேயிலையின் உற்பத்தி பாரியளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா, கென்யா, இந்தியா ஆகிய நாடுகளில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கிறது. 

உலகில் தேயிலை உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கும் இலங்கையில்  தேயிலை உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி  2022 இல் இலங்கையில் தேயிலை உற்பத்தி 15 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்த தரவுகளின் பின்னணியிலேயே இலங்கையின்  தேயிலை துறை எதிர்நோக்கும் சிக்கல்களை ஆராயவேண்டியுள்ளது. 

இலங்கையில்   கொரோனா வைரஸ் தொற்று தாக்கியபோது  டொலர் உள்வருகை ஸ்தம்பிதமடைந்தது.    சுற்றுலாத்துறை,   வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்புகின்ற டொலர், வெளிநாட்டு நேரடி முதலீடுகள்  என்பன கிடைக்கவில்லை. அதேபோன்று பொருளாதார பிரச்சினை காரணமாக கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு டொலர் உள்வருகை  ஸ்தம்பித்து போயிருந்த 2020 ஆம் ஆண்டின் பின்னரான நிலைமையிலும் கூட   தேயிலை துறை  ஊடாக  தொடர்ந்து டொலர்கள் உள்வந்து கொண்டேயிருந்தன.  அதாவது டொலர்கள் இல்லாமல் இலங்கை பாரிய நெருக்கடியை சந்தித்தபோதுகூட தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் துறையூடாக இலங்கைக்கு டொலர்களை பெற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். 

கிட்டத்தட்ட 1.5 பில்லியன்  டொலர்கள் வருடம்தோறும் இலங்கைக்குள் வருகின்றன.     அது இலங்கை மக்களின் பசியை போக்கியது.   இலங்கையில் இந்த தேயிலை துறை என்பது எந்தளவு   முக்கியத்துவம் மிக்கது என்பது இங்கு  புலப்படுகிறது. தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் 1700 ரூபா  சம்பள அதிரிப்பை கோரியுள்ளனர். அரசாங்கமும் 1700 ரூபா  வழங்க வேண்டும் என்று வர்த்தமானியை வெளியிட்டிருக்கின்றது. முதலாளிமார் சம்மேளனம் அதனை மறுத்திருக்கின்றது. விடயம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. ஆனால் இன்னும் முடிவுகள் கிடைத்தபாடில்லை. இந்த பின்னணியில் தேயிலைத் துறையை தொடர்பான தற்போதைய நிலைமையை ஆராய்ந்து பார்ப்பது இங்கு மிக முக்கியமாக இருக்கிறது.

 பிரச்சினைகள் என்ன? 

இன்றைய நிலையில் இலங்கையின் தேயிலை துறை பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருக்கின்றது.  தேயிலைத் துறையை தொடர்ந்து முன்கொண்டு செல்வதே பெரிய பெரும் நெருக்கடியை தோற்றுவித்திருக்கின்றது. அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.  காலநிலை மாற்றம், உரங்களின் விலை அதிகரிப்பு, உலகப்போர்கள் மத்திய கிழக்கு யுத்தங்கள் மற்றும் ரஷ்யா உக்ரேன் யுத்தம்,    உலக சந்தையில் தேநீர் மீதான நாட்டம் குறைகின்றமை  போன்றன முக்கிய காரணங்களாகவுள்ளன.    பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த சவால்களின் காரணமாக தேயிலை துறையை முன்கொண்டு செல்வதே   நெருக்கடி மிக்கதாக காணப்படுகிறது. 

 இலங்கைக்கான எரிபொருள் 

வாகனங்களுக்கு எரிபொருள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே இலங்கைக்கு  தேயிலை துறை முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டில்கூட 1.3 பில்லியன் டொலர்கள் தேயிலைத் துறை ஊடாக இலங்கைக்கு கிடைத்தன. 

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின்  பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில், மக்களின்  பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதில் தேயிலைத்துறையின் பங்களிப்பு முக்கியமானது.    அதை புறக்கணித்து இலங்கையின் பொருளாதாரத்தை கணிப்பிட முடியாது.    தேயிலைத் துறை தொடர்ந்து இயங்கினால்தான் அது தொடர்ந்து செயல்பட்டால்தான் இலங்கைக்கு டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.   தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். எனவே சவால்களைக் கடந்து அதன் இருப்பை தக்கவைத்துக் கொள்வது மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. 

இலங்கை யாருக்கு தேயிலை விற்கிறது?

 இலங்கை பல்வேறு நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. அதில் முக்கியமாக மிக அதிகளவான தேயிலையை இலங்கையிலிருந்து துருக்கி இறக்குமதி செய்கிறது. அதற்கு அடுத்ததாக ஈராக்,  ரஷ்யா, டுபாய், சீனா, சவுதி அரேபியா, அசர்பஜான், சிரியா, லிபியா, அமெரிக்கா என்று   இலங்கையில் இருந்து தேயிலேயே இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்திய  பிரிட்டன்,   ஐரோப்பிய   நாடுகள் இலங்கையிலிருந்தான தேயிலை இறக்குமதில் முன்னணியில் இல்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாக இருக்கிறது. 

ஏற்றுமதியில் தேயிலையின் நிலையான முக்கிய பங்கு

 இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வருடம்தோறும் கிட்டத்தட்ட 10 பில்லியன் முதல் 12 பில்லியன் டொலர்களாக பதிவாகின்றன.  அதில் கிட்டத்தட்ட 12 வீத  பங்களிப்பு  தேயிலை துறை மூலமே கிடைக்கிறது.  அதாவது கிட்டத்தட்ட 1.5  பில்லியன் டொலர்கள் வருடம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன.  இதனை 2.5 பில்லியன் டொலர்களாக உயர்த்த முடியும் என்பது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் இலக்காகவும் இருக்கிறது. 

 அப்படி இருந்தும் கூட இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 12 வீதமான பங்களிப்பை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இலங்கையின் சிலோன் டி என்பது உலக வர்த்தகத்தில் மிக பிரசித்திபெற்ற   ஒரு குறியீடாக இருக்கின்றது.   சிலோன் தேயிலை என்றால் அது     சகலரும் அறிந்த ஒரு வர்த்தக பெயராக இருக்கின்றது. இலங்கையின் தேயிலைகளில் பல வகைகள் காணப்படுகின்றன. அதில் பிளக் டீ என்பதுதான் இலங்கையில் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக இருக்கிறது.    

 உலகில் நான்காவது அதிக தேயிலை உற்பத்தி செய்யும் இலங்கை

கடந்த மூன்று வருடங்களில் இலங்கையின் தேயிலைத் துறை  மூலமான  ஏற்றுமதி  வருமானம் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்தாலும்கூட தொடர்ந்து தேயிலை துறையின் பங்களிப்பானது முக்கியத்து மிக்கதாகவே இருக்கின்றது. இலங்கையின் விவசாய ஏற்றுமதிகளில் தேயிலை ஏற்றுமதியே உயர்ந்து காணப்படுகிறது.

அது 65 வீதமாகும்.  உலகில் அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் இருக்கின்றன. சீனா இந்தியா கென்யா போன்ற நாடுகள் அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்கின்றன. அதில் நான்காவது அதிகம் தேயிலையை உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருக்கிறது. உலக தேயிலை உற்பத்தியில் இலங்கை கிட்டத்தட்ட 9  வீத பங்களிப்பை செய்கிறது.

இலங்கையில் ஊவா தென் மத்திய மேல் மாகாணங்களில் பல மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தேயிலை பயிரிடப்படுகிறது.   கிட்டத்தட்ட இலங்கை ஒரு வருடத்திற்கு 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த சில வருடங்களில் அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது 250 மில்லியன் அளவுக்கு உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தரவுகள் கூறுகின்றன.  இதில் கிட்டத்தட்ட   35 வீதமானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க வேண்டும்.  

தற்போதைய தேயிலை உற்பத்தி கட்டமைப்பு 

இலங்கையில் பிரித்தானியர் காலத்தில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய கம்பனிகள் அதிகளவில் தேயிலை தோட்டங்களை நடத்தின.  சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகி இருந்தன.  1972 ஆம் ஆண்டு அப்போதைய  அரசாங்கம் சகல தோட்டங்களையும் அரசாங்கமயமாக்கியது. 

 1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கமே தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தியது.  1992 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியது. அந்தவகையில் கடந்த 32 வருடங்களாக தனியார் துறையினர் அதிக அளவில் தோட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 22 தனியார் கம்பெனிகள் தற்போது இலங்கையில் இந்த தேயிலை தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.    அரசாங்கமும் இன்னும் சில நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்த சபை என்ற பெயரில் ஒரு அரசாங்க நிறுவனம் பெருந்தோட்டங்களை நடத்துகிறது. அதேபோன்று எல்கடுவ பிளாண்டேஷன் என்ற நிறுவனமும் தோட்டங்களை நிர்வகிக்கின்றது. அதுமட்டுமன்றி இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம் என்ற   பெயரிலும் அரசாங்கம் ஒரு பெருந்தோட்ட நிறுவனத்தை நடத்துகின்றது.  இந்த மூன்று அரச நிறுவனங்களின் கீழும் கிட்டத்தட்ட 36 தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

இவற்றில் 8000 அளவில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.    பல வருடங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 3 இலட்சம் பேர் வரையில் தோட்டத்  தொழிலாளர்கள் இருந்தனர்.  ஆனால் இன்று கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் வரையில் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 

இவர்களுக்கு சம்பள கட்டுப்பாட்டு சபையின் கீழான கூட்டு உடன்படிக்கை ஊடாகவே சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. சம்பளத்துக்கு மேலதிகமாக தோட்டங்களில் பிள்ளை பராமரிப்பு, நீர்வசதி,  கல்வி வசதிகள் சுகாதார வசதிகள் வீட்டு வசதிகள் என்பனவும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின்றன.  அவற்றின் தரம் சமூக அபிவிருத்தி என்பது தொடர்பான பிரச்சனைகள் காணப்பட்டாலும் இந்த விடயங்கள் கூட்டு உடன்படிக்கையின் மூலம் செய்யப்படுகின்றன. 

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் இந்த நிறுவனங்கள் 25  வீதமளவில் பங்களிப்பு செய்கின்றன. 75 வீதமான பங்களிப்பு சிறுத்தோட்ட உரிமையாளர்கள் ஊடாகவே வழங்கப்படுகிறது.    சிறிய தோட்டங்களை கொண்டிருக்கின்ற உரிமையாளர்கள் இவ்வாறு தேயிலையை உற்பத்தி செய்து வழங்குகின்றனர். சிறுதேயிலை தோட்டத் துறையில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். மொத்தமாக   கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் தொழில் செய்கின்றனர். குடும்பங்களுடன் பார்த்தால்  சுமார்  20 லட்சம் பேர் இந்த துறையில் தங்கி வாழ்கின்றனர்.   

முதலாளிமார் சம்மேளனம் என்ன கூறுகிறது? 

சம்பள அதிகரிப்பு விகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டுகிறார். 

‘’ தேயிலை துறையை பொறுத்தவரையில் பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே நாங்கள் அதனை கொண்டு நடத்துகிறோம்.  உலக அளவில் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தேயிலைக்கான கேள்வி குறைவடைந்து செல்கிறது. கிட்டத்தட்ட 50 வீதமானளவில் தற்போது தேயிலை பாவனை உலக மட்டத்தில் குறைவடைந்து இருக்கிறது. இந்த நிலைமைகளை நாங்கள் சமாளிக்க வேண்டியதாக இருக்கின்றது. எனவே 1700 ரூபாய் சம்பளம் அதிகரிப்பை வழங்குவது என்பது மிகவும் கடினமானது ‘’  இவ்வாறு  ராஜதுரை சுட்டிக்காட்டுறைார். 

‘’ நாங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கின்றோம். நீர் வசதி, வீடு வசதி கல்வி சுகாதார வசதிகள் பிள்ளைகள் பராமரிப்பு போன்ற வசதிகளை செய்து கொடுக்கிறோம்.  எனவே அவற்றையும் இணைத்துத்தான் இதனை பார்க்க வேண்டும்.   

உர விலை எரிபொருள் விலை அதிகரிப்பு மின்சாரம் கட்டண அதிகரிப்பு,  தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு உலகத்தில் தேயிலைக்காண கேள்வி குறைவடைதல்   உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தேயிலை உற்பத்தி துறை பாரிய நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றது.  இந்த நிலைமைகளுக்கு மத்தியிலும் நாங்கள் இவற்றை செய்து கொண்டிருக்கின்றோம்’’  என்றும்  முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.  

‘’ 22 தோட்டங்களை தனியார் துறையினர் எடுத்து நடத்துகின்றனர்.  இதன் கீழ் கிட்டத்தட்ட 4485 தோட்டங்கள் இருக்கின்றன.  அரசாங்கத்துக்கு எந்த விதமான சுமையும் இதில் இல்லை.  அரசாங்கத்துக்கு நாங்கள் உரிய வரிகளை செலுத்தி கொண்டிருக்கின்றோம். நாங்கள் மக்களுக்கு வருமான பகிர்வு முறையை முன்வைக்கின்றோம். 

அதாவது மக்கள் எந்தளவு தூரம் தேயிலை பறிக்கிறார்களோ அந்த அளவுக்கு கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் முறையை நாங்கள் முன்வைக்கின்றோம். ஆனால் அதனை ஏற்றுக் கொள்கின்றார்கள் இல்லை.  தேயிலை துறையை நாம் காப்பாற்ற வேண்டும்.   அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.  அதிகளவு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நாங்களும் விருப்பம் தான்.   2020 ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி குறைவடைந்தது.

அப்போது நாங்கள் ஜப்பானின் சந்தையை இழந்தோம். அதனை இன்னும் எங்களால் மீட்க   முடியாமல் இருக்கிறது.  இதுபோன்ற பல சவால்கள் காணப்படுகின்றன கிட்டத்தட்ட 340 மில்லியன்   கிலோ அளவில் தேயிலை உற்பத்தி செய்த இலங்கை   இன்று 250 மில்லியன் அளவில் மட்டுமே உற்பத்தி செய்கிறது.’’  என்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டுகிறார்.    

என்ன செய்யலாம்? 

இலங்கையின் டொலர் வருமானத்தின் உயிர்நாடியாக இருக்கும்  தேயிலைத் துறையை காப்பாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது.  அதேநேரம் தேயிலை துறையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் சம்பள உயர்வு நியாயமாக வழங்கப்பட வேண்டும். இன்று அனைவரும் வாழ்க்கை செலவு உயர்வினால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர். மக்களினால் தாம் பெறுகின்ற சம்பளத்தை எதிர்கொண்டு வாழ்க்கைச் செலவை முன்னெடுக்க முடியாத சூழல் காணப்படுகிறது.  தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.  அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவது அவசியம். 

வறுமையினால் அதிகளவு பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் 

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை அதிகரித்துள்ளது.  30 இலட்சமாக 2019 ஆம் ஆண்டு காணப்பட்ட வறிய  மக்களின் எண்ணிக்கை 70 லட்சமாக உயர்வடைந்துள்ளது. இதில் பெருந்தோட்ட மக்களே  அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட   ஆய்வுகளின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.   வறிய மக்களில் பெருந்தோட்ட மக்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.  

பெருந்தோட்டங்களில் காணப்படுகின்ற  சமூக பொருளாதார பின்னடைவு இதற்கு காரணமாக இருக்கிறது.   நாட்டின் ஏனைய பகுதி மக்களை விட பெருந்தோட்ட மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கின்றார்கள்.  அந்த வகையிலேயே அவர்களுக்கு  சம்பள உயர்வின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.  வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளங்கள் வழங்கப்பட வேண்டும்.  மறுபுறம் கம்பனிகள்   சம்பள உயர்வை  இந்தளவு தூரம் கொடுத்தால் தம்மால் நிறுவனங்களைக் கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர்.    தேயிலை கைத்தொழில் துறையானது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.  இதன் நன்மை மக்களை சென்றடைய வேண்டும். இதன் ஊடான டொலர் வருமானம் அதிகரிக்க வேண்டும்.   

நிபுணர்கள் கூறுவது என்ன?  

இந்நிலையில் இலங்கையின் தேயிலைத் துறை நீடிப்புக்கு அல்லது அதன் இருப்புக்கு காணப்படும் சவால்கள் என்ன ? என்பதும் இங்கே மிக முக்கியமாக இருக்கின்றது.  இந்த விடயத்தில் பல்வேறு ஆய்வுகளை செய்து இருக்கின்ற மற்றும் இது  தொடர்பாக அதிகளவு தெளிவை பெற்று இருக்கின்ற புத்திஜீவி  பேராசிரியர் சந்திரபோஸ் முன்வைக்கின்ற விடயங்கள் இங்கு முக்கியத்துவமாக இருக்கின்றன. 

அவர் பல்வேறு விடயங்களை சவால்களாக குறிப்பிடுகின்றார். 

 அதாவது தோட்ட  கம்பெனகளின் உற்பத்தி திறன் மிகக் குறைவாக இருக்கின்றது.  அதாவது உயர்ந்த விளைச்சலை தரும் தேயிலை பயிர் செய்கையில் முதலீடு இல்லை.    அடுத்ததாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்ற காணிகளில் 30 வீதமானவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன என்று கலாநிதி   சந்திரபோஸ் சுட்டிக்காட்டுகிறார். 

‘’அதுமட்டுமின்றி மூன்றாவது முக்கியமான சவாலாக பெருமளவு தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக அன்றி தற்காலிக தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.  குறைந்த வயதிலேயே அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவர்கள் தற்போது நிரந்தர தொழிலாளர்களாக இல்லை.  எனவே அவர்களின்  இந்த துறையிலான  நாட்டம் குறைகிறது.  70 வீதமானவர் இன்று தற்காலிக தொழிலாளர்களாகவே மாறியிருக்கின்றனர்.  எனவே அவர்களிடம்   தொழில் மீதான  பற்று குறைவாக இருக்கின்றது.  இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் ‘’   என்றும் சந்திரபோஸ் கூறுகிறார். 

அவர் கூறுவதைப்போன்று தற்போத இலங்கையில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் 340 மில்லியன் கிலோ அளவில் உற்பத்தி இடம்பெற்றது. ஆனால் இன்று  சுமார் 250 மில்லியன் கிலோ அளவில் உற்பத்தியே இடம்பெறுகிறது. இது கணிசமான சரிவை காட்டுகிறது. உலகில் மக்களின் தேநீர் மீதான நாட்டத்தின் வீழ்ச்சியையும் இந்த விடயம் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. 

’ மேலும் தேயிலை ஏற்றுமதி வருமானம் சரியான நாட்டுக்குள் வராத   நிலைமை காணப்படுகிறது.  ஆரம்ப காலத்தில் உற்பத்தி செய்வது ஒரு கம்பனி,  ஏலம் எடுப்பது ஒரு கம்பெனி, சர்வதேச விற்பனையில் ஈடுபடுவது ஒரு கம்பெனியாக இருந்தன.  ஆனால் இன்று சகல விடயங்களையும் ஒரே கம்பனி  செய்கின்றது.

அத்துடன்  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு  பெருந்தோட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவோ அல்லது   தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகவோ செய்யப்படுவதில்லை.  மாறாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களின் நலனுக்காகவே இந்த அமைச்சு செயல்படுகின்றது.  இந்த நிலைமையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்’’  என்றும்  சந்திரபோஸ் விளக்கமளிக்கிறார். 

 சமூக பாதுகாப்பு எங்கே?  

 ‘’மேலும் தோட்ட தொழிலாளரின் நலன்களுக்காக 1889 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் கட்டளை சட்டமே இன்னும் காணப்படுகிறது. இன்றும் அந்த சட்டம் சட்டமே இது இவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றது.     ஒரு தோட்டத்தை எடுத்துக் கொண்டால் அந்த மக்களின் பாதுகாவலனாக துரைமார்கள் இருக்கின்றனர். 

மாறாக அந்த சமூக கட்டமைப்பு இல்லாத பிரச்சனை காணப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் உள்ளது.  தோட்டங்களில் பணிபுரிகின்ற  மக்களின் சுகாதாரம் வீடு நீர் கல்வி பிள்ளைகள் பராமரிப்பு உள்ளிட்ட சகல விடங்களுக்கும் இந்த நிதியம்  பொறுப்பாக இருக்கின்றது.

அதுவே இன்று இந்த மக்களில் அதிகளவானோர் வறிய மக்களாக இருப்பதற்கும் காரணமாக இருக்கின்றது. இன்று தோட்டங்களில் 53  விதமானோர்   வறுமை கோட்டின் கீழ் வாழுகின்றனர்.  இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதும் கலாநிதி சந்திரபோஸின் முக்கியமான யோசனையாக இருக்கின்றது. 

தீர்வு என்ன? 

இவ்வாறு பல்வேறு சவால்களையும் இலங்கையில்  தோட்டத்துறை எதிர்கொள்கிறது.   இதற்கு மிக முக்கியமான ஒரு தீர்வு என்ன என்பதும் இங்கே அவசியமாக ஆராயப்பட வேண்டும். இது தொடர்பில் நிபுணர்களினால் ஒரு தீர்வு முறை முன்வைக்கப்படுகிறது.   அதாவது தோட்ட தொழிலாளர்கள் 1700 சம்பள அதிகரிப்பை கோருகின்றனர்.  அவர்களது வாழ்க்கை செலவு அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.  மறுபுறம் கம்பனிகள் அந்த தொகையை தம்மால் கொடுக்க முடியாது என்றும் அந்தளவுக்கு வருமானம் இலாபம் இல்லை என்றும் கூறுகின்றன.    இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?  முதலில் தற்போது தொழிலாளர் கோருகின்ற சம்பள அதிகரிப்பை வழங்கவேண்டும். 

ஆனால்  நீண்டகாலத்துக்கு தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது.  எனவே நிபுணத்துவ ஆலோசனைகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்களின் படி தொழிலாளர்களை சிறிய தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவது இதற்கு காணப்படுகின்ற ஒரே தீர்வு என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதனை சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.  அதாவது பெருந்தோட்டங்களில் காணப்படுகின்ற காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி அவற்றில் அவர்கள்    உற்பத்தியை செய்ய முடியும். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இறுதியில்  லாபத்தில் செலவுகள் போக அந்த வருமான பகிர்வை மக்களுக்கு வழங்க  முடியும்.  இதனூடாக தொழிலாளர்களும் நன்மையடைவார்கள்.  அதேபோன்று பெருந்தோட்ட நிறுவனங்களும் நன்மை அடையும். 

 ஏற்றுமதி வருமானமும் அதிகரிக்கும். இதனை ஒரு தேசிய பொறிமுறையாக முன்னெடுப்பது அவசியமாகும்.  தற்போது நிறுவனங்கள் இந்த வருமான பகிர்வு பொறிமுறையை முன்னெடுப்பதற்கு தயார் என்று அறிவித்திருக்கின்றன. ஆனால் அது   தேசிய மட்டத்தில் தேசிய பொறிமுறை ஊடாக செய்யப்படுவது அவசியமாக இருக்கின்றது. மக்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்றுவதற்கான ஒரு பொறிமுறையாக இது அமைவது முக்கியமாகும்.

முதலாளிமார்கள், அரசியல் தலைவர்கள்,    தொழிற்சங்க தலைவர்கள்   என சகலரும் இதனை பேசுகின்றனர்.  ஆனால் இதனை சரியான முறையில் செயல்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகிறது.  அது எதிர்கால திட்டமாக அமையலாம். ஆனால் தற்போதைய நிலையில் தொழிலாளர்களில் கவனம் செலுத்துவது   மிக முக்கியம். அவர்களுக்கான சம்பள உயர்வு முக்கியம்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாகவும் மக்களின் எரிபொருள் தேவையை நிறைவேற்றவும் டொலர் கொண்டுவர தமது வியர்வையை சிந்தும் தோட்டத் தொழிலாளர்கள் இன்றும்   வசதிகளற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்கள் நாட்டின் தற்போதைய நிர்வாக கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படவேண்டும். தோட்டங்களில் பணிபுகின்றார்கள் என்று அவர்களை புறந்தள்ள முடியாது.  

தேயிலை துறை தொடர்ந்து பாதுகாக்கப்படுவது அவசியம். அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் உரிய சம்பள அதிகரிப்புடன் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படுவது முக்கியம். இவற்றை செய்து கொண்டு நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்