குழந்தைகளின் பிடிவாதத்திற்கு யார் காரணம்?
1 ஆடி 2024 திங்கள் 15:15 | பார்வைகள் : 1280
குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய வேண்டுமே தவிர… குழந்தையுடன் சேர்ந்து அந்த பிடிவாத குணமும் வளர்வது நல்லதல்ல.
பிடிவாதம் செய்யும் குழந்தைகள் விஷயத்தில் அந்த குடும்ப உறுப்பினர்கள் தான் முதல் காரணமாக இருக்கிறார்கள். "என் பேரன் அப்படியே எங்க அப்பா மாதிரி நினைச்சதை சாதிச்சிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பான்", "அம்மா அப்பா வாங்கி கொடுக்கலையா அழாதே மாமா வாங்கித் தருகிறேன் நீ கவலைப்படாதே" "உனக்கு என்ன வேண்டுமோ அதை கேளு அதை வாங்கி கொடுக்க தானே அம்மா அப்பா இருக்கிறோம்" இதுபோன்ற கூற்றுகள் குழந்தை மனதில் நாம் என்ன நினைத்தாலும் நடந்து விடும், நமக்கு கேட்பதை வாங்கிக் கொடுப்பது இவர்களுடைய கடமை, நாம் நினைத்ததை செய்து தருவதற்கு தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து விடுகிறது.
ஆரம்பத்தில் குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பது இயல்பு என்றாலும் தான் நினைத்தது நடக்கும் வரை அழுது கொண்டே இருப்பது, கத்தி அலறுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிவது, கீழே விழுந்து உருண்டு புரண்டு அழுவது போன்றவை பிடிவாதத்தின் அடுத்த நிலைகளாகும். குழந்தைகளை இந்த நிலையிலேயே சரி செய்யாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சிறு சிறு தோல்விகளை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவும், தான் நினைத்த காரியம் நடந்தே ஆக வேண்டும் என்ற தவறான மனப்பான்மை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். சிறிதும் தன்னம்பிக்கை இன்றி தான் நினைத்ததை அடுத்தவர்கள் செய்து முடித்து தர வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி காணப்படும்.
குழந்தைகள் ஏதேனும் பொருட்களைக் கேட்டு அடம் பிடித்து நாம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்றால் அந்த சூழ்நிலையை குழந்தையிடம் எடுத்துரைக்க வேண்டும். "அம்மாவிடம் இப்பொழுது காசு இல்லை, அப்பாவிற்கு இன்னும் சம்பளம் வரவில்லை, தாத்தா உனக்கு இன்னொரு நாள் வாங்கித் தருகிறேன்" இதுபோன்ற உண்மை காரணங்களை கூற வேண்டும். இப்பொழுதே வேண்டும் என்று குழந்தை அடம் பிடித்தால் அடுத்த முறை என்றால் அடுத்த முறை தான் என்று குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
குழந்தை கேட்கும் பொருட்களை உடனே வாங்கி கொடுப்பதை முதலில் நிறுத்தி… அது அந்த குழந்தைக்கு தேவையா? இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த பொருள் உபயோகமானதுதானா? என்று யோசித்து அந்த குழந்தையுடன் அதை கலந்தாலோசித்து வாங்குங்கள்.
குழந்தை ஏதேனும் பொருளுக்கு அடம் பிடிக்க தொடங்கினால் அது அடம்பிடித்து முடிக்கும் வரை யாரும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாலே அந்த குழந்தை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சிறிது நேரத்தில் தன்னாலே சமாதானம் ஆகிவிடும்.
குழந்தைகளுக்கு தேவை இல்லாத பொருட்களுக்கு இல்லை என்று சொல்லிப் பழகுங்கள் எது நினைத்தாலும் கிடைக்கும் என்ற மனப்பான்மையை இது மாற்றும்.