விசாரணையை முடக்க அடுத்தடுத்து மனுக்கள்: செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை புகார்
2 ஆடி 2024 செவ்வாய் 05:45 | பார்வைகள் : 1417
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓராண்டாக புழல் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து, உத்தரவு கூறப்பட இருந்த நிலையில், அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வந்தார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும்; ஆவணங்கள் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என, செந்தில் பாலாஜி தரப்பில், கடந்த வாரம் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அமலாக்கத் துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனுக்களை தாக்கல் செய்தார்.
இதில், 'விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், செந்தில் பாலாஜி தரப்பில், தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மனுக்கள் மீது, இன்றே வாதங்களை கேட்டு முடிவு செய்ய, மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்த வேண்டும்' என்றார்.
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, “இந்த நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள், இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. மற்றொரு நாளில் வாதங்களை நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களுக்காக, வரும் 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.அல்லி, அன்றைய தினம் வரை 42வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்தார்.
சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்
அமலாக்கத்துறையின் பதில் மனுக்கள் விபரம்: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி, ஏற்கனவே மனுதாரர் தாக்கல் செய்த மனுவை, இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்துகிறார். தற்போதைய மனுக்களை தாக்கல் செய்ததன் ஒரே நோக்கம். சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.