நீட் தேர்வுக்கு எதிராக வாய் திறந்தார் விஜய்: அரசியலை ஆரம்பித்தார்
3 ஆடி 2024 புதன் 08:02 | பார்வைகள் : 1548
தமிழகத்திற்கு நீட் வேண்டாம், ‛நீட்' தேர்விற்கு எதிராக கொண்டு வந்த தமிழக அரசின் தீர்மானத்தை முழு மனதாக வரவேற்கிறேன் என மாணவர்கள் மத்தியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய், கடந்தாண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை கவுரவித்து வருகிறார். இந்தாண்டும் அதேப்போல் மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இன்று(ஜூலை 3) இரண்டாம் கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் 17 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் : வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கு வணக்கம். இன்றைக்கும் எதுவும் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் முக்கியமான விஷயத்தை பேச வேண்டி உள்ளது. அது என்னவென்றால் நீட். நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக கிராமத்தில் உள்ள மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலின மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் சத்தியமான உண்மை.
1975க்கு முன் மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு பொதுப் பட்டியலில் சேர்த்தது தான் முதல் பிரச்னை. ஒரே நாடு, ஒரே கல்வி பாடத்திட்டம் என்பது கல்விக்கு எதிரான பிரச்னையாக பார்க்கிறேன். மாநிலத்திற்கு ஏற்றபடி கல்வித்திட்டம் இருக்கும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத சொன்னால் எப்படி. இது கடினமான விஷயம்.
நடந்து முடிந்த நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை பார்க்கும்போது நீட் தேர்வில் இருந்த நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் போய்விட்டது. நீட் தேர்வே வேண்டாம் என்பது தான் மக்களின் மனநிலை. இதற்கு ஒரே தீர்வு நீட் விலக்கு. தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் விலக்கு தீர்மானத்தை முழு மனதாக நான் வரவேற்கிறேன்.
மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தேவை என்றால் நுழைவுத்தேர்வு நடத்திக் கொள்ளட்டும். மாநில வாரியாக கல்விமுறையில் மாற்றம் இருக்கும். அதற்கு ஏற்றபடி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
தீர்வுக்கு என்ன வழி
இந்த பிரச்னைக்கு நிரந்தரவு தீர்வு வேண்டும் என்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அதில் சட்ட சிக்கல்கள் இருப்பின் சிறப்பு பொதுப்பட்டியலில் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். அதில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
வெற்றி நிச்சயம்
மாணவர்கள் ஜாலியாக படியுங்கள், மன அழுத்தத்திற்கு ஆள் ஆகாதீர்கள். இந்த உலகம் மிக பெரியது. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ஒன்று போய்விட்டது என்றால் இன்னொன்று பெரிதாக கிடைக்க போகிறது என்று அர்த்தம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.இவ்வாறு விஜய் பேசினார்.
ஒன்றிய அரசு எனக்குறிப்பிட்ட விஜய்
நடிகர் விஜய் பேசும் போது மத்திய அரசை, தி.மு.க., பாணியில் ஒன்றிய அரசு எனக்குறிப்பிட்டு பேசினார்.