அமீரகம், ஓமனில் 7 ஆம் திகதி பொது விடுமுறை அறிவிப்பு
3 ஆடி 2024 புதன் 09:31 | பார்வைகள் : 2902
இஸ்லாமியநாட்காட்டியின் முதல் மாதம் 'முகரம்' மாதமாகும்.
நபித்தோழர் உமர் (ரழி), தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள்.
இறுதியில் இஸ்லாமியர் முதல் மாதமாக முகரம் மாதத்தை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தார்கள்.
'ஹிஜ்ரி' ஆண்டு என்பது நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.
இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
இதையொட்டி அமீரக மனிதவளம் மற்றும் அமீரகமயமாக்கல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "அமீரகத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு வருகிற 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை தினம் ஆகும். இதனால் இந்த விடுமுறை காரணமாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பயன் இல்லை.
ஓமன் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓமன் நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7 ஆம் திகதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
இஸ்லாமிய வருடப்பிறப்பையொட்டி 7-ந்தேதி பொது விடுமுறை விடப்படுவதால் அரசுத்துறையினருக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் ஒரு சில ஊழியர்களின் பணி மிகவும் அத்தியாவசியமாக கருதி அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டால், அதற்கேற்ப அவர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது அதனை ஈடு செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.