Paristamil Navigation Paristamil advert login

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழாய்வு பணி நாளை!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழாய்வு பணி நாளை!

3 ஆடி 2024 புதன் 16:32 | பார்வைகள் : 458


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே 16 ஆம் திகதியன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விசாரணை மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தை தோண்டிய போது மனிதப் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகளின் கண்காணிப்புகளின் கீழ் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அகழாய்வுகளின்படி இதுவரையில் அந்த மனிதப்புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள், இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்துடன் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின்போது மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

இதன்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும் பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அகழாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் சிசிரிவி கமரா மற்றும் காவல்துறையின் கண்காணிப்புகளின் கீழ் மீண்டும் நாளைய தினம் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்