267 கிலோ தங்கம் கடத்தலில் சர்வதேச தொடர்பு: விரிவடைகிறது விசாரணை வளையம்
4 ஆடி 2024 வியாழன் 03:15 | பார்வைகள் : 1559
சென்னை விமான நிலையத்தில், 60 நாளில், 167 கோடி ரூபாய் மதிப்புள்ள, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச கும்பலின் தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் முகம்மது சபீர் அலி, 30; யுடியூபர். அவர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில், 'ஏர்ஹப்' எனும் பொம்மை மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
விமான நிலையத்தில் கடைகள் நடத்த, வித்வேதா பி.ஆர்.ஜி., எனும் நிறுவனம், இந்திய விமான ஆணையத்திடம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திடம், 77 லட்சம் ரூபாய் கொடுத்து, சபீர் அலி கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கடை ஊழியர்களாக ஏழு பேரை பணியில் வைத்துள்ளார். அவர்களுக்கு, வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனம் வாயிலாக, விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் அடையாள அட்டையும் பெற்றுத் தந்துள்ளார். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி, அவரது கடை ஊழியர்கள் விமான நிலையத்தின் எந்த பகுதிக்கும் செல்ல முடியும். சில தினங்களுக்கு முன், இலங்கையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், சென்னை விமான நிலையம் வந்தார். அவர் மீது, சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர், ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், 60 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, 167 கோடி ரூபாய் மதிப்புள்ள, 267 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சபீர் அலி, அவரது கடை ஊழியர்கள், இலங்கை பயணி என, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடை நடத்த, வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனத்திடம் சபீர் அலி கொடுத்த, 77 லட்சம் ரூபாயும் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்துள்ளது. தங்கக் கட்டிகள் கடத்தலில் சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் கிடைத்த தகவல்களை, சுங்கத்துறை அதிகாரிகளிடம், தமிழக போலீசார் பெற்றுள்ளனர். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
சபீர் அலிக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், பா.ஜ., மாணவர் அணியைச் சேர்ந்த பிரித்வி என்பவர் தான் உரிமம் பெற்று தந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த கடத்தல் விவகாரத்தில், வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அவர்களின் வீடுகளில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
விசாரணை வளையத்தில் பிரித்வி
கடத்தல் பின்னணியில் பிரித்வி உள்ளார். தங்கக் கட்டிகள் கடத்துவதற்காக, சபீர் அலிக்கு அவர் கடை நடத்த உரிமம் பெற்றுத் தந்துள்ளார் எனக் கூறப்படும் நிலையில், அதை பிரித்வி மறுத்துள்ளார். ஆனாலும் அவர், சுங்கத்துறை மற்றும் சி.பி.ஐ., விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில், காளிகாம்பாள் கோவில் அருகே அவரது வீடு உள்ளது. பிரித்வியுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
கடைகளில் சோதனை
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சபீர் அலியின் கடையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு கடைகளில் நேற்று சோதனை செய்தனர். கடத்தல் கும்பல் பின்னணி மற்றும் அதில் தொடர்புடைய நபர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தல் நடந்தது எப்படி
வெளிநாடுகளில் இருந்து, தங்கக் கட்டிகள் கடத்தி வரும் டிரான்சிட் பயணியர், சென்னை விமான நிலைய கழிப்பறைக்கு செல்வர். அவர்களை பின்தொடர்ந்து சபீர் அலி கடை ஊழியர்களும் செல்வர். கழிப்பறையில் தங்கக் கட்டிகள் கைமாற்றப்படும். சபீர் அலி கடை ஊழியர்கள், அதை ஆடையில் மறைத்து வெளியே எடுத்து வருவர்.
அவர்களிடம், விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அடையாள அட்டை இருப்பதால், சுங்கத்துறை மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள். பின்னர், பல்லாவரத்தில் தங்கியிருக்கும் கடத்தல் கும்பலை சந்தித்து, தங்கக் கட்டிகளை ஒப்படைத்து விடுவர்.