Paristamil Navigation Paristamil advert login

செங்கோல் குறித்து தவறான பேச்சு: மதுரை எம்.பி.,க்கு கண்டனம்

செங்கோல் குறித்து தவறான பேச்சு: மதுரை எம்.பி.,க்கு கண்டனம்

4 ஆடி 2024 வியாழன் 03:40 | பார்வைகள் : 1883


லோக்சபாவில் செங்கோல் குறித்து தவறாக பேசி, தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசனுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: லோக்சபாவில் பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன், தமிழர் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் செங்கோலையும், தமிழ் பெண்களையும் கேவலப்படுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது.

செங்கோல் என்பது நடுநிலை தவறாது ஆட்சிக்கான அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது என தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்து கூறப்படுகிறது.

திருவள்ளுவர் தனது திருக்குறில், ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோல் தன்மையை எடுத்து கூறுகிறார். நீதி மன்றங்களில் நடுநிலையை துலாக்கோல் அடையாளப்படுத்துவது போல செங்கோல் என்பது ஆட்சியின் அடையாளம்.

மதுரையம்பதியில் அன்னை மீனாட்சி அரசாட்சி செய்வதால், செங்கோல் தரும் வைபவம் இன்றும் நடக்கிறது என்பதை மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., மறந்தது மகா கேவலம். இன்றளவும் ஆன்மீகம் வளர்த்தெடுக்கும் ஆதீனங்கள், ஆட்சியாளர்களுக்கு செங்கோல் அளித்து நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்ய வாழ்த்தும் பாரம்பரியத்தின் அடையாளமாக செங்கோல் விளங்குகிறது.

செங்கோல் மற்றும் அதை ஏந்தி ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் குறித்து எம்.பி., கேவலமாக பேசிய போது, தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கைதட்டி ரசிக்கிறார். தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ஹிந்து விரோத கட்சிகள் மட்டுமல்ல; தமிழ், தமிழர் விரோத கட்சிகள் என, ஆகிப்போனதை தமிழர்கள் உணர வேண்டும்.

தமிழ், தமிழ்நாடு என பேசி, பேசியே ஏமாற்றிய தி.மு.க.,வின் உண்மை முகத்தை கூட்டணி கட்சியான கம்யூ., எம்.பி., லோக்சபாவில் பேசி அசிங்கப்படுத்தி உலகறிய செய்து விட்டார்.

தமிழனை, தமிழ் இலக்கியங்களை, தமிழன் பண்பாட்டை, பாரம்பரியத்தை கேவலப்படுத்திய கம்யூ., எம்.பி., மற்றும் அதனை கைதட்டி வரவேற்ற தி.மு.க., எம்.பி.,க்களும் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்