சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாரா? சித்தராமையாவுக்கு எடியூரப்பா சவால்!
5 ஆடி 2024 வெள்ளி 05:20 | பார்வைகள் : 1845
முதல்வராக தொடர, சித்தராமையாவுக்கு உரிமையில்லை. தைரியம் இருந்தால், சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தலை சந்தியுங்கள்,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில், நேற்று மாநில பா.ஜ., சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து எடியூரப்பா பேசியதாவது: லோக்சபா தேர்தல் முடிந்து, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார். கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றது.
விலைவாசி உயர்வு
காங்கிரசின் பண பலம், ஆட்சி பலம் என பல முயற்சிகளை மீறி, மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். கர்நாடகாவில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால், பா.ஜ., 130 - 135 இடங்களில் வெற்றி பெறும். லோக்சபா தேர்தலில், எங்களின் தவறால், சில இடங்களில் பின்னடைவை சந்தித்தோம். ஆனால், மக்கள் தெளிவாக, காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர்.
மாநில அரசின் தவறான கொள்கையால், திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது. சட்டசபை உறுப்பினர்களுக்கு கூட மானியம் வழங்கவில்லை. அனைத்து வரிகளையும் உயர்த்தி உள்ளனர். இதனால், விலைவாசி உயர்வுக்கு ரூட் போட்டு கொடுத்து உள்ளனர்.
கருவூலம் காலியானதால், வளர்ச்சி பணிகள் நின்றுவிட்டன. வாக்குறுதி திட்டத்தை நிறுத்தி விட்டு, வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குங்கள் என காங்கிரஸ் தலைவர்களே, கூறும் நிலை உருவாகி உள்ளது. எங்கெல்லாம் வரியை உயர்த்த முடியுமோ, அங்கெல்லாம் வரியை உயர்த்தி, மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளனர்.
சட்டம் - ஒழுங்கு
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு, விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் என பல சம்பவங்கள் நடந்தள்ளன. வால்மீகி ஆணையத்தின் முறைகேடுக்கு பின், மைசூரு நகர மேம்பாட்டு வாரிய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் முதல்வரின் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது.
அரசின் தவறான நிர்வாகம், மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அனைத்து முறைகேடுகளையும் சட்டசபை கூட்டத்தொடரில் அம்பலப்படுத்தி, ஒரு நிமிடம் கூட ஆட்சியில் அமர, காங்கிரசுக்கு உரிமை இல்லை என்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் போராட வேண்டும்.
ராஜினாமா
சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் ஆட்சியில் தொடரும் தார்மீகத்தை இழந்துவிட்டனர். முதல்வராக தொடர சித்தராமையாவுக்கு உரிமையில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால், சட்டசபையை கலைத்துவிட்டு, தேர்தலை சந்தியுங்கள். இந்திராவால் கூட, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக முடியவில்லை.
ராஜிவால் தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக முடியவில்லை. ராகுலால் தொடர்ந்து மூன்றாவது முறையாக, 100 இடங்களை கைப்பற்ற முடியவில்லை. விரைவில் நடக்க உள்ள கர்நாடகா உள்ளாட்சி தேர்தல்களில், அதிக இடங்களை பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் அகர்வால் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில், எடியூரப்பா தலைமையில் கிடைத்த வெற்றி பெருமைக்குரிய நாள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதும், அதிக எம்.பி.,க்களை டில்லிக்கு அனுப்பி உள்ளீர்கள்.
நீங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கா விட்டால், இது நடந்திருக்காது. 19 இடங்களில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. சித்தராமையா ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலுக்கு சென்றால், பா.ஜ., தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்.
காங்கிரஸ் அரசு, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்திய போதிலும், அக்கட்சிக்கு 45 சதவீதமும்; பா.ஜ.,வுக்கு 51.5 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. இவ்வாறு அவர் பேசினார்.