Paristamil Navigation Paristamil advert login

நரைமுடியை கருமையாக மாற்றும் தன்மை நெல்லிக்காய்க்கு உள்ளதா?

நரைமுடியை கருமையாக மாற்றும் தன்மை நெல்லிக்காய்க்கு உள்ளதா?

7 ஆடி 2024 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 1166


நமது தலைமுடியின் நிறமானது மயிர்க்கால்களில் உள்ள மெலனோசைட்ஸ் மூலமாக உற்பத்தியாகும் மெலனின் என்ற பிக்மென்ட் காரணமாக நிர்ணயிக்கப்படுகிறது. நமக்கு வயதாகும் பொழுது மெலனின் உற்பத்தி குறைவதால் சாம்பல் அல்லது வெள்ளை நிற முடி ஏற்படுகிறது. இது தவிர மரபணு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவையும் இளநரைக்கு பங்களிக்கிறது.

நெல்லிக்காயில் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் C, ஆன்டி ஆக்சிடன்ட்கள், பாலிபீனால்கள் மற்றும் பல்வேறு மினரல்கள் உள்ளன. இவை பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு இயற்கை தீர்வுகளை தருவதற்கு உதவுகின்றன. அதிலும் குறிப்பாக நெல்லிக்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின் C வயதான செயல்முறைக்கு காரணமான ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது.

தலை முடியின் ஆரோக்கியத்தில் நெல்லிக்காயின் பங்கு: நெல்லிக்காயில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது தலைமுடி செல்களுக்கு சேதம் அளித்து வயதான செயல்முறையை தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. இதன் மூலமாக நெல்லிக்காய் நீண்ட நாட்களுக்கு தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களில் மெலனின் உற்பத்தியை ஊக்குவித்து, சாம்பல் நிற தலை முடியை கருமையாக மாற்றுவதற்கு உதவுவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கிறது.

மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து அவற்றை வலிமையாக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது. இது மயிர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அவற்றிற்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதன் மூலமாக தலைமுடியின் இயற்கையான நிறம் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின்களும், மினரல்களும் தலைமுடி சேதத்தை சீராக்கி, மேலும் தலைமுடியில் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊற வைத்து அந்த எண்ணெயை தலைமுடி மற்றும் மயிர்கால்களில் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். இதனை வழக்கமான முறையில் செய்து வர சாம்பல் நிற முடி கருமையாக மாறும் என்று நம்பப்படுகிறது.

நெல்லிக்காயை உலர வைத்து பொடியாக அரைத்து அதனை தண்ணீருடன் கலந்து பேஸ்டாக்கி தலைமுடி மற்றும் மயிர்கால்களில் தடவ வேண்டும். இந்த பேஸ்டை சிறிது நேரம் ஊற வைத்த பிறகு, தலை முடியை அலசவும். இது தலைமுடிக்கு ஒரு கண்டிஷனர் போல செயல்பட்டு, முடியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் அதன் இயற்கை நிறத்தை மீட்டெடுக்கிறது.

உங்களுக்கு ஃபிரஷான நெல்லிக்காய் கிடைக்கும் என்றால் தாராளமாக நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம். ஆனால் இதனை நீங்கள் கட்டாயமாக வழக்கமான முறையில் செய்து வந்தால் மட்டுமே நல்ல முடிவுகளை பெற முடியும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்