சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம் : முதல்வர் ஸ்டாலின்
11 ஆடி 2024 வியாழன் 08:09 | பார்வைகள் : 1046
சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர அவர் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பே பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தோம். சாத்தியமுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
பேரூராட்சி டூ நகராட்சி
ரூ.51 கோடி செலவில், அரூர் அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மக்கள் இருக்கும் இடத்திலேயே மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண, மக்களுடன் முதல்வர்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியாக உள்ள அரூர், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலும் செய்வோம்.
பொறாமை
தி.மு.க., அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். தமிழகத்தில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு நல்ல மனம் மற்றும் குணம் இல்லை. 10 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ., தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.
வெற்றி ரகசியம்
மத்திய அரசு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன். திமுக பொறுத்தவரை நாங்கள் மக்கள் கூட இருக்கிறோம். இது தான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து வளர்ச்சியை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.