அதானி குறிவைக்கும் பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம் !
11 ஆடி 2024 வியாழன் 08:12 | பார்வைகள் : 1022
சென்னைக்கு அருகில் பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவது மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக தான் அதானி திடீரென சென்னை வருகை தந்து முக்கிய புள்ளிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி, இரு நாட்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்திருந்தார். இங்கு முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழகத்தில் பல கோடிக்கு முதலீடு செய்வதற்காக ஒப்பந்தங்கள் செய்திருந்தது. இதனால் தமிழகத்தில் பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்யும் திட்டம் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அதானியின் திடீர் வருகை குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வெளியான தகவல்களின்படி, கவுதம் அதானி மற்றும் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் அவரது சகோதரருமான ராஜேஷ் சந்திலால் அதானி, அவரது மகன் கரண் அதானி (அதானி துறைமுகம், சிஇஓ) உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலை பகுதிக்கு சென்றுள்ளனர். அதே பகுதியில் தான் முதல்வர் ஸ்டாலினின் வீடு இருக்கிறது. ஆனால், அவர்கள் முதல்வரை சந்தித்தனரா எனத் தெரியவில்லை.
அன்று முழுவதும் முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர்கள் இரவு விமானத்தில் கிளம்பும்முன் இ.சி.ஆர்.,-ல் இரவு விருந்து முடித்துக்கொண்டு கிளம்பியுள்ளனர். அதானி குழுமம் தமிழகத்தில் தற்போது ராமநாதபுரத்தில் 700 மெகாவாட் சோலார் மின்சாரம் தயாரிப்பு மற்றும் வட சென்னையில் காட்டுப்பள்ளி துறைமுக மேம்பாட்டிற்கு முதலீடு செய்துள்ளது. அதுதவிர பரந்தூர் விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும், ஏற்கனவே கான்ட்ராக்ட் எடுத்திருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும் அதானி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.