அமெரிக்க ஜனாதிபதியாக ஜோபைடன் தெரிவு செய்யப்படுவாரா....? ஜனநாயக கட்சியின் போர்க்கொடி
11 ஆடி 2024 வியாழன் 09:24 | பார்வைகள் : 2034
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோபைடன் தெரிவு செய்யப்படுவாரா என்பது குறித்து ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தேர்தலிற்கு நிதிவழங்குபவர்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாக காணப்படும் நான்சி பெலோசியும் ஜோர்ஜ்குளுனியும் ஜோபைடன் தேர்தலில் வெற்றிபெறுவாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றாரா என்பது குறித்து பைடன் தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர் பைடனின் நீண்டகால சகா என்பது குறிப்பிடத்தக்கது.
பைடன் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புகின்றாரா என்பது குறித்து அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை ஹொலிவூட் நடிகரும் ஜனநாயகட்சியின் ஆதரவாளரும் கடந்தமாதம் பைடனுடன் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டவருமான ஜோர்ஜ் குளுனி நியுயோர்க் டைம்சில் கடுமையான கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.
மூன்றுவாரங்களிற்கு முன்னர் நிதிதிரட்டும் நிகழ்வில் நான் சந்தித்த ஜோபைடன் 2010 ஆண்டின் ஜோபைடன் இல்லை ஏன் 2020 ஆண்டின் ஜோபைடன் கூட இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்புடனான விவாதத்தில் நாம் பார்த்த நபரே அவர் என தெரிவித்துள்ள குளுனி இந்த ஜனாதிபதியுடன் நாங்கள் நவம்பர் 20 தேர்தலில் வெற்றிபெறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சனப்பிரதிநிதிகள் சபையையும் நாங்கள் வெல்லமாட்டோம் செனெட்டையும் நாங்கள் இழப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பைடனை தவிர வேறு எந்த வேட்பாளரையும் ஆதரிக்கதயார் என செனெட்டின் பெரும்பான்மை தலைவர் சக் சூமர் தெரிவித்துள்ளார்.