பாகிஸ்தானில் சந்தையில் பாரிய தீ விபத்து
11 ஆடி 2024 வியாழன் 09:29 | பார்வைகள் : 1696
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத்திலுள்ள வாராந்த சந்தையொன்றில் நேற்று பரவிய தீயினால் குறைந்தபட்சம் 500 கடைகள் தீக்கிரையாகியுள்ளன.
'இத்வார் பஸார்' என அழைக்கப்படும் இந்த வாராந்த சந்தையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்தள்ள இந்த வாராந்த சந்தையில் 2,700 இற்கும் அதிகமான கடைகள் நடத்தப்பட்டு வந்தன.
இச்சந்தையின் ஆடைகள் மற்றும் பாதணிகள் பிரிவில் நேற்று தீ ஏற்பட்டதாகவும், விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் இத்தீ பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைப்பதற்காக 31 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப்படையினரின் உதவிகளும் கோரப்பட்டன.
இத்தீயினால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. எனினும் சுமார் 500-700 கடைகள் தீக்கிரையாக்கியுள்ளதாக த-லைநகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அலி ரந்தாவா தெரிவித்துள்ளார்.
இத்தீயை அணைப்பதற்கு அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி உத்தரவிட்டார்.
இத்தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறியவும் சேதங்களை மதிப்பீடு செய்யவும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில், கடந்த மாதம் ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 80 கடைகள் தீக்கிரையாகிருந்தன.
அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத் தப்பட்ட பொருட்களை விற்பனை செய் யும் கடைகளாகும். அச்சம்பவத்தில் மூவர் காயமடைந்திருந்தனர்.