Paristamil Navigation Paristamil advert login

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி வார்த்தை போர்

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி வார்த்தை போர்

13 ஆடி 2024 சனி 02:52 | பார்வைகள் : 714


பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து, ஆளும் கூட்டணி - எதிர்க்கட்சி கூட்டணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., ஆகியவை, மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெறவில்லை. தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன், மத்தியில் மீண்டும் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

இவர்களது ஆதரவு தவிர்க்க முடியாதது என்பதால், மத்திய அமைச்சரவையில், தெலுங்கு தேசத்துக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும், பா.ஜ., உரிய முக்கியத்துவம் அளித்தது.

மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி அரசில் அங்கும் வகிக்கும் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, சமீபத்தில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில், அம்மாநிலத்தில் ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

காங்., மூத்த தலைவரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் கூறுகையில், “ஐக்கிய ஜனதா தள ஆதரவு இல்லாமல், மத்தியில் பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாது என்பது, அனைவருக்கும் தெரியும்.

“இந்த கூட்டணி அரசில், கிங்மேக்கராக இருந்தும், நிதீஷ் குமார் எதுவுமே செய்ய முடியாதவராக இருக்கிறார். அவரை பிரதமர் மோடி மதிப்பது கூட இல்லை. எங்களை துாக்கியெறிந்து, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்த நிதீஷுக்கு, மோடி கொஞ்சமாவது மரியாதை அளிக்க வேண்டும்,” என்றார்.

ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ., பாய் வீரேந்திரா கூறுகையில், “பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளமும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில், அக்கூட்டணியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள், மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றனரா?” என்றார்.

பீஹார் அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான ஷ்ரவன் குமார் கூறுகையில், “சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை, முந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புறக்கணித்தது. சிறப்பு அந்தஸ்தை, பிரதமர் மோடி வழங்குவார்,” என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்