காவிரி நீர் பிரச்சினைக்கு மேகதாது திட்டம் ஒன்றே தீர்வு; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
1 புரட்டாசி 2023 வெள்ளி 09:38 | பார்வைகள் : 4676
காவிரி நீர் பிரச்சினைக்கு மேகதாது திட்டம் ஒன்றே தீர்வு என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மாநில அரசு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி சென்றார். அங்கு கர்நாடக பவனில் சட்ட நிபுணர்களுடன் அவர் கலந்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, குடிநீருக்கு தேவையான நீர் போன்ற விஷயங்கள் குறித்து அவர் வக்கீல்களிடம் எடுத்துக் கூறினார்.
மேலும் கர்நாடகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் அவர் கூறினார். இந்த கூட்டத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆணையம் உத்தரவிட்டதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை.
மழையும் சரிவர பெய்யவில்லை. இந்த நிலையில் கர்நாடக விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. இது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு அதிகாரிகள் கர்நாடகம் வந்து நிலைமையை பார்த்தால் தெரிந்து கொள்வார்கள்.
அவர்களை நேரில் காண அழைக்கிறேன். அதைப்போல தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவர்களும் எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். மதிப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு மேகதாது அணைதான்.
அந்த அணை கட்டப்பட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அது கர்நாடகத்துக்கானது மட்டும் அல்ல. தமிழ்நாட்டுக்கும் உதவும். இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக அரசுக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் மூத்த வக்கீலிடமும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இவர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக அரசு வலியுறுத்தும் என தெரிகிறது.