'Fête Nationale' (14 Juillet) உருவானது எப்படி? ஒரு மினி பார்வை.
14 ஆடி 2024 ஞாயிறு 06:50 | பார்வைகள் : 3338
முதலில் எங்களின் வாசகர்கள், விளம்பரதாரர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் 'Fête Nationale' இனிய தேசிய தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் paristamil.com மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
உலகில் மக்கள் புரட்சிக்கு வித்திட்ட புரட்சி 'பிரஞ்சு புரட்சி' மன்னர்களின் ஆட்சியை முதன்முதலில் துடைத்து எறிந்து மக்கள் ஆட்சியை, ஜனநாயக ஆட்சியை, அறிமுகம் செய்ததும் பிரஞ்சு புரட்சிதான். 'Bastille' சிறையுடைப்பை 1789 Juillet 14ல் நடத்தியதன் மூலம் இந்த பிரஞ்சு புரட்சி பிறந்தது.
Bastille சிறையுடைப்பு நடைபெற்று ஓராண்டின் பின்னர் 1790ல் அதன் வெற்றியை கொண்டாட நினைத்த அன்றைய பிரான்ஸ் அரசும், மக்களும் அந்த நினைவு நாளை 'Fête de la Fédération' ,கூட்டமைப்பு கொண்டாட்ட நாள்' எனும் பெயரில் அன்று கொண்டாடினர் என்கின்ற அதன் வரலாறு.
பின்னாளில் 14 Juillet நாளை தங்களின் தேசிய நாளாக மாற்றியமைக்க மக்களின் ஒரு சாராரும், விடுதலையில் பங்கெடுத்த கட்சியினரும் விரும்பினார்கள், ஆனால் அவர்களின் விருப்பம் அன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அன்றைய ஆட்சியாளர்கள் அதனை ஒரு சிறப்பு வெற்றி நாளாகவே தொடர்ந்தும் நினைவுகூர விரும்பினர், ஆனாலும் இவர்கள் தொடர்ந்தும் தங்களின் கோரிக்கையில் பிடிவாதமாகவே இருந்து வந்தனர்.
சிறையுடைப்பு 1789 நடைபெற்று சுமார் 90 ஆண்டுகளுக்கு பின்னர் 1879 அமைக்கப்பட்டு வளர்ந்து வந்த பிரான்சின் மூன்றாம் குடியரசு தேசிய மற்றும் குடியரசு விடுமுறையை ஒன்று சேர்ந்து நடத்த ஒரு திகதியை நாடியது. பல திகதிகள் பரிசீலிக்கப்பட்டன, அன்று செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினரான Benjamin Raspail " சிறையுடைப்பு நாளான '14 Juillet' நாளை முன்மொழிந்து 64 பிரதிநிதிகளின் கையெழுத்துடன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.
அந்த மசோதா 1880 ஜுன் 8ம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து குறித்த முடிவு சட்டங்களை அங்கீகரிக்கும் மேல் சபைக்கு அனுப்பப்பட்டது, விவாதங்கள், ஆய்வுகளின் பின்னர் மேல்சபை ஜூன் 29 அன்று குறித்த மசோதாவை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து 1880 ஜூலை 6ம் திகதி 'Le Journal officiel' வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 Juillet தேசிய தினமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.