பேரீட்சைப்பழ அல்வா
14 ஆடி 2024 ஞாயிறு 14:57 | பார்வைகள் : 598
நம்மில் பலருக்கும் பேரிச்சம் பழம் பிடிக்கும். நம்மில் பலர் பேரிச்சம் பழத்துடன் தான் நமது நாளை துவங்குவோம். ஏனென்றால் இதை எக்கசக்க சத்துக்கள் உள்ளன. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
அதுமட்டும் அல்ல, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தையம் இது குறைக்கும். அப்படி ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பேரிச்சம்பழத்தை வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வால்நட்ஸ் - 2 கப்.
பேரீட்சைப்பழம் - 400 கிராம் விதை நீக்கியது.
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.
சோள மாவு - 1/4 கப்.
நெய் - தேவையான அளவு.
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி வால்நட்டை சேர்த்து வறுத்து கொள்ளவும். பின் அது நன்கு ஆறியதும், மிக்சியில் ஒன்று இரண்டாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இதன் போது, பேரீட்சைப்பழத்தின் விதையை நீக்கி தனியே எடுத்து வைக்கவும். இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பேரீட்சைப்பழம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
பேரீட்சைப்பழம் நன்றாக மசிந்து, தண்ணீர் வற்றியதும் அதில் நெய் சேர்த்து கலந்து விடவும்.
இதையடுத்து, எடுத்து வைத்துள்ள சோள மாவில் தண்ணீர் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். சேர்மம் கெட்டியாக இருக்க கூடாது.
இப்போது, சோளமாவு தண்ணீரை பேரீட்சைப்பழத்தில் ஊற்றி நன்றாக கிளறவும். ஹல்வா பதத்திற்கு வந்ததும், இதில் ஏலக்காய் தூள், வறுத்த வால்நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
பிறகு நெய் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும். நெய் நன்றாக பிரிந்து வரும் நிலையில் அடுப்பை அனைத்து இறக்கினால், அருமையான பேரீட்சைப்பழ அல்வா தயார்.