குரங்கு அம்மை : உச்சக்கட்ட விழிப்பில் பிரான்ஸ் - பிரதமர் அறிவிப்பு!!
16 ஆவணி 2024 வெள்ளி 17:47 | பார்வைகள் : 5645
ஸ்வீடன் நாட்டில் குரங்கு அம்மை (variole du singe) அடையாளம் காணப்பட்டயில் இருந்து, பிரான்ஸ் இந்த தொற்று நோயில் இருந்து நாட்டைக் காப்பாற்ற தயாராகி வருகிறது.
சற்று முன்னர் பிரதமர் கப்ரியல் அத்தால் இது தொடர்பில் தெரிவிக்கையில், "état de vigilance maximale" எனும் வார்த்தையை குறிப்பிட்டு, பிரான்ஸ் மிகுந்த விழிப்புடன் இருப்பதாக தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னதாக உலக நாடுகள் அனைத்திற்கும் இந்த குரங்கு அம்மை தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆபிரிக்க நாடுகளை பாதித்துள்ள இந்த குரங்கு அம்மை, தற்போது பாக்கிஸ்தானில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசியாவுக்கும், ஸ்வீடனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பாவுக்குள்ளும் இந்த குரங்கு அம்மை நுழைந்துள்ளது.
பிரெஞ்சு சுகாதார அமைச்சர், தொழிலாளர் அமைச்சு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர்களுடன் பிரதமர் கப்ரியல் அத்தால் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதை அடுத்து இந்த தகவலை அவர் சற்று முன்னர் வெளியிட்டார்.