ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் படைகளிடம் இருந்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
17 ஆவணி 2024 சனி 05:40 | பார்வைகள் : 2260
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், இஸ்ரேலின் முதன்மையான, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை படுகொலை செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் அமைச்சர்கள், உளவுத்துறை அதிகாரிகள், முன்னாள் அல்லது தற்போதையராணுவ அதிகாரிகள், ஷின் பெத் அல்லது மொசாத் அமைப்பில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதனையடுத்து கலக்கமடைந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை, உளவு அமைப்பான Shin Bet-ன் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவிடம் இருந்து தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்து, தங்களை தயார்படுத்திவரும் நிலையிலேயே படுகொலை தொடர்பான எச்சரிக்கை கசியவிடப்பட்டுள்ளது.
ஜூலை 31ம் திகதி தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழி தீர்க்கப்படும் என ஈரான் சபதமெடுத்திருந்தது.
இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Israel Katz பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களிடம் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளதாக கூறப்படுகிரது.
மேலும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை முன்னெடுக்கும் என்றால், மேற்கத்திய நாடுகள் உதவ முன்வரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலை முன்னெடுக்கும் என்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, ஈரானின் முக்கியமான பகுதிகளை தாக்கவும் நட்பு நாடுகள் இணைந்து செயல்படும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Israel Katz தெரிவித்துள்ளார்.
ஆனால், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாக தகவல் கசிந்தாலும், வியாழக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் முன்னெடுக்க வாய்ப்பு என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தாலும், ஈரான் தரப்பில் மொத்த நடவடிக்கைகளையும் ரகசியமாக வைத்துள்ளனர் என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தொடுத்த ஏவுகணை தாக்குதலை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.