டுபாயில் இருந்து வந்த பணம் - யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்
18 ஆவணி 2024 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 1587
டுபாய் நாட்டில் வசிக்கும் நபரிடம் பணம் பெற்று, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கூலிப்படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த உடமைகளை சேதமாக்கிவிட்டு தப்பி சென்று இருந்தனர்.
குறித்த சம்பவத்தில் சுமார் 3 இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , கோண்டாவில் பகுதியை சேர்ந்த 19 மற்றும் 23 வயதான இரண்டு நபர்களையும் , அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ., ஐந்து வாள்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் , ஏனைய மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமக்கு துபாய் நாட்டில் இருந்து நபர் ஒருவர் பணம் அனுப்பி , குறித்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ள கூறியமையாலையே தாக்குதலை மேற்கொண்டதாகவும் , தமக்கும் குறித்த வீட்டில் வசித்தவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பொலிஸ் விசாரணைகளில் கூறியுள்ளனர்.