ஒழுக்க விழுமியங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்
18 ஆடி 2023 செவ்வாய் 07:06 | பார்வைகள் : 3589
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒழுக்கம் உள்ள சமுதாயத்தை உருவாக்குவது முக்கியமாகும். ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு எல்லாத்துறைத் தலைவர்களினதும் பொறுப்பாகும். ஒழுக்கம் உள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டிகளாக இருக்கின்ற அரசியல், மதத் தலைவர்கள் ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனை இலங்கையில் தொடர்ச்சியாக காணக் கூடியதாக இருக்கின்றது.
துறைசார்ந்த தலைவர்களிடம் மட்டுமல்ல சாரதிகளிடமும் ஒழுக்கமின்மை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அவர்கள் வாகனங்களை மது போதையிலும், அதிக வேகமாவும் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் மிக மோசமான விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெறுமதியான மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே மதங்கள் தோற்றம் பெற்றன. அத்தகைய மதங்களைப் போதிக்கின்ற ஒரு சில தலைவர்களிடம் ஒழுக்க விழுமியங்கள் இல்லாமல் இருப்பது பலத்த அவமரியாதையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் இத்தகையவர்கள்தான் இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி தாம் சார்ந்த இனத்தினர் மாத்திரமே நாட்டில் வாழத் தகுதியானவர்கள் என்ற விஷக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி நாட்டை பல வழிகளிலும் சீரழித்தனர். இத்தகைய சிந்தனையுடையவர்களின் பின்னால் அரசியலில் ஒழுக்கம் பிழைத்தவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தமை பகிரங்கமான உண்மையாகும்.
இனவாதிகள் மூலமாக தேர்தல் வெற்றிகளை மாத்திரம் குறி வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியலில் ஒழுக்கம் பிழைத்தவர்கள் இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்தமையினால்தான் நாட்டில் ஊழல், மோசடிகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளைச் செய்தவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே காலத்திற்கு காலம் அரசாங்கமும் செயற்பட்டு வந்துள்ளன.
அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மேடைப்பேச்சுக்கும் அவர்களுடைய செயல்பாட்டுக்கும் எந்த ஒரு தொடர்பையும் நாம் காண முடியாது. எந்த சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதியாக இருந்தாலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாகவே இருக்கின்றார்கள். அரசியல்வாதிகளும், உயர்அதிகாரிகளும் செய்த பாரிய ஊழல் காரணமாகத்தான் நாடு மிக மோசமான பொருளாதார பின்னடைவை கண்டிருக்கின்றது. இந்த பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்காக இன்றைய அரசாங்கம் மக்கள் மீது பாரிய வரிச் சுமைகளை விதித்துள்ளது.
ஊழல் புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்களிடம் இருந்து பணத்தை மீள அறவீடு செய்யாமல், நாட்டு மக்களை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி கொண்டிருப்பது மேலும் மேலும் மோசமான நிலைமையே ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடையே ஒரு வெறுப்புத் தன்மையும் காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுவாக நிதி விடயத்தில் அதிகமான மோசடிகளில் ஈடுபட்டவர்களாக அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும்தான் காணப்படுகின்றார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை என்பதே நாட்டை உண்மையாக நேசிக்கின்றவர்களின் கருத்தாக இருக்கின்றது. நிதி மோசடிகளிலும், இலஞ்சம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் எவ்வாறு நாட்டில் நிதி ரீதியான ஒழுக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரையில் ஒழுக்கவிழுமியங்கள் தேய்வடைந்து கொண்டு வருகின்றமையால் எதிர்காலத்தில் மிக மோசமான பின்னடைவுகள் எல்லாத்துறைகளிலும் ஏற்படும்.
அண்மையில் பௌத்த விகாரை ஒன்றில் இரண்டு பெண்களுடன் தேரர் ஒருவர் தவறான முறையில் இருந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட இரு பெண்களையும் நிர்வாண நிலையில் வீடியோ எடுத்த ஒரு கும்பல் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் யாரும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமாக செயற்பட வேண்டும். ஆனால், இலங்கையில் சட்டம் சகலருக்கும் சமம் என்பது பேச்சளவிலேயே இருக்கின்றது.
இதே வேளை, அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்புரை செய்வது ஒழுக்கமான செயலாகாது. அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனெனில் குற்றம் செய்தவரை தண்டிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கே இருக்கின்றது. சாதாரண மக்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட முடியாது. 2010ஆம் ஆண்டின் பின்னர் ஒரு சில தேரர்களும், இனவாதிகளும் சட்டத்தை கைகளில் எடுத்து முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
ஒரு தனிநபர் செய்த ஒழுக்கக் கேடான செயலை சமூக வலைத்தளங்களில் பகிரும் போது, எந்தத்தவறும் செய்யாத அந்த நபர் சார்ந்துள்ள குடும்பத்தினர் அவமானப்படுத்தப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது. இது மன்னிக்க முடியாத குற்றமாகவே பார்க்க வேண்டும். ஒருவரின் மானம் அவரின் உயிரை விட மேலானது.
ஆகவே எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு இவ்வாறான மோசமான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளை ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடித்து நடக்காதவர்கள் அவர்கள் எத்துறை சார்ந்த தலைவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் இன்று நாடு ஒழுக்க ரீதியாக பல்வேறு வகையில் பின்னடைவுகளை கண்டு வருகின்றது. ஆகவே சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் பேணப்படுகின்ற போதுதான் ஒழுக்கம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். அத்தகைய சமுதாயத்தினால்தான் நாட்டை முன்னேற்ற முடியும்.
ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கினால்தான் ஒழுக்கமான நாட்டை உருவாக்கலாம். பொருளாதார ரீதியில் முன்னேற்றகரமான ஒரு நாடாகவும், ஒற்றுமை மற்றும் ஐக்கியமான ஒரு நாடாகவும் மாற்றலாம். இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களை பாதுகாக்க முற்படுகின்ற பொழுது அது வேறு விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் அண்மைக்காலமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
இதே வேளை இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதே வேளை தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் இந்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதிலிருந்து விடுபட வேண்டும். சிறுபான்மையினராகிய நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அரசியல் தலைவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக நடக்கின்ற போது ஏனைய விடயங்களிலும் ஒழுக்கத்தை பேணக் கூடியதாக இருக்கும். ஆனால், இன்று அரசியல்வாதிகளிடம் ஒழுக்க விழுமியங்கள் மழுங்கிப் போய் காணப்படுகின்றன.
நாட்டில் உள்ள சட்ட, திட்டங்களின் படி அதிகம் தண்டிக்கப்படுகின்றவர்களாக சாதாரண மக்கள் தான் காணப்படுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் முக்கியமான மதத் தலைவர்களும் குற்றமிழைத்த போதிலும் சட்டத்தினால் அவர்கள் பாதுகாக்கப்படுவதை தாராளமாகக் காணலாம்.
நன்றி வீரகேசரி