Paristamil Navigation Paristamil advert login

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

21 ஆவணி 2024 புதன் 09:14 | பார்வைகள் : 344


சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஜப்பான், சிங்கப்பூர், செம்ப்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னையில் 28 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

<b>மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-</b>

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ரூ.17,614 கோடி மதிப்பிலான 19 வகை திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் 64,968 பேருக்கு வேலை கிடைக்கும். ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன்; இதன் மூலம் 41,835 பேருக்கு வேலை கிடைக்கும். 

இதில் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை; பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது. தமிழ்நாட்டின் தொழில் துறை, வளர்ச்சி வரலாற்றில் இது முக்கியமான நாளாகும்.

உலக முதலீட்டாளர்களின் முதல் விருப்பமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான், இங்கு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

முதலீடு செய்து தொழில் தொடங்கும் நிறுவனத்தினர் மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவேண்டும். தொழிலதிபர்கள் தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் தொடங்கலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுக்க தெரியும். தமிழ்நாட்டு பெண்களின் கல்வி, அறிவு, வேலை வாய்ப்பு விகிதம் நாட்டின் சராசரியை விட அதிகம். தொழில் வளர்ந்தால் மாநிலமும் வளரும், மக்களின் வாழ்க்கையும் உயரும். 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்