Paristamil Navigation Paristamil advert login

கோல்கட்டா சம்பவத்தால் திரிணமுல் கட்சிக்குள் வெடித்தது மோதல்!

கோல்கட்டா சம்பவத்தால் திரிணமுல் கட்சிக்குள் வெடித்தது மோதல்!

22 ஆவணி 2024 வியாழன் 08:19 | பார்வைகள் : 645


மேற்கு வங்கத்தில் இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மருமகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி கோல்கட்டாவின் ஆர்.ஜி.கார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தலையிட்டு, அம்மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக இருந்த சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மோதல்
இந்த நிலையில், டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மருமகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த பேரணியை அபிஷேக் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

ஆர்.ஜி. கார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் சந்தீப் கோஷ் மற்றும் அவரது மருத்துவக் குழுவினரை உடனடியாக பணிநீக்கம் செய்யாதது திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். மம்தா பானர்ஜி தனது இமேஜை பாதுகாத்துக் கொள்ள, குற்றம்சாட்டப்பட்ட மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அவர் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

அதிருப்தி
அதேவேளையில், கட்சியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சாந்தனு சென்னை கட்சியில் இருந்து மம்தா பானர்ஜி அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும், டாக்டர் கொலை விவகாரத்தை அபிஷேக் பானர்ஜி சரியாக கையாளவில்லை என்றும் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

டாக்டர் கொலையால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அவரது மருமகனும் மோதலில் ஈடுபட்டிருப்பது திரிணமுல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாக்
மேற்கு வங்க மாநிலமே போராட்டங்களால், என்ன செய்வதென்று மம்தா பானர்ஜி புலம்பி வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த மாதம் அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல இருப்பது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்