Paristamil Navigation Paristamil advert login

மூத்த குடிமக்களது அறிவு, ஆற்றல், அனுபவம் எதிர்கால சந்ததியினருக்கான வழிகாட்டிகள் -  உலக மூத்த குடிமக்கள் தினம் 

மூத்த குடிமக்களது அறிவு, ஆற்றல், அனுபவம் எதிர்கால சந்ததியினருக்கான வழிகாட்டிகள் -  உலக மூத்த குடிமக்கள் தினம் 

22 ஆவணி 2024 வியாழன் 15:46 | பார்வைகள் : 409


ஒரு மனிதனின் வாழ்வில் பிறப்பு, குழந்தைப் பருவம், இளமைப் பருவம், விடலைப் பருவம், சம்சாரி, முன் முதுமை பருவம், பின் முதுமைப் பருவம், இறப்பு என எட்டு பருவங்கள் காணப்படுகின்றன. இவையே மனித வாழ்க்கைச் சுற்று வட்டத்தில் ஏற்படும் மாற்றச் சக்கரங்கள் ஆகும்.

அந்த பருவங்களை எல்லாம் கடந்து இறுதியில் வருகின்ற ஒரு பருவம் தான் முதுமைப் பருவமாகும். இவற்றுள் முன் முதுமை பருவம், பின் முதுமைப் பருவம்  ஆகியனவே மனிதனின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பல சந்தர்ப்பங்களில் எனது நண்பர்களுடன் கதைக்கும் பொழுது அவதானித்துள்ளேன்.

பணி ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். அந்த தொழிலில் இருந்து ஓய்வு பெறுவது முன்முதுமைப் பருவமாகும். 

நான் கடமையாற்றிய அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சக உத்தியோகத்தர் ஒருவர்,  தான் ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ச்சியாக அலுவலகத்துக்கு வருகை தரத் தொடங்கினார்.  அந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வேலை செய்து வந்தமையால் அவரால் அந்த ஓய்வு நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை காணப்பட்டது. 

அதுவே பின்னாளில் அவரது மனநிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியதானது இன்றும் மனதில் அசை போடுகின்றது.

பின் முதுமைப் பருவ காலகட்டத்தில் உடலியல் ரீதியாக நலிவுற்று, ஒரு  தளர்ச்சியும்  ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் மன அழுத்தம், உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், தேவையற்ற பயம், நடையில் ஒரு தளர்ச்சி, நீடித்த உடல் உபாதைகள், ஞாபக மறதி, பிறரை சார்ந்து வாழ்தல், பிறரின் உதவியினை எதிர்பார்க்கும் நிலைமை போன்றவற்றை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தமக்கு வயதாகிவிட்டதே, தன்னால் ஏதும் செய்ய முடியாதுள்ளதே என்ற ஏக்க உணர்வானது பல  முதியவர்களின் மனதை உறுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. 

இவ்வாறான மாற்றங்களும் கூட மனித வாழ்வில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு தான் என்பதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுகின்ற பொழுது மட்டும்தான்,  உளவியல் ரீதியாக ஒரு நேர்மறைத் தன்மை ஏற்படும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

"பிறக்கும் போது எதனைக் கொண்டு வந்தோம். 

அதனை  இழப்பதற்கு 

எதனையும் கொண்டு வரவும் இல்லை 

அந்திமக் காலத்தில் எதனையும் எம்முடன் கொண்டுசெல்லப் போவதுமில்லை

பிறகு எதற்கு நாம் கவலைப்பட வேண்டும் ?

வயோதிபப் பருவமும் வாழ்க்கைச் சுற்றில்  ஏற்படும் ஒரு குழந்தைப் பருவம் தான் !

இருக்கின்ற காலத்தை மகிழ்வாகவும்,  சந்தோசமாகவும், வாழ்ந்து மகிழ்வது அவசியமாகும்.

இந்த உண்மையை புரிந்துகொண்டாலே மனதில் ஒரு குதூகலம் உண்டாகும். 

இன்றைய முதியவர்கள் ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள்தான் ! 

இவர்கள் தமது குடும்பத்துக்காகவும் சமூகத்துக்காகவும் தேசத்துக்காகவும் அர்ப்பணித்த பங்களிப்புகள் அதிகம்! அனேகம்!

மூத்த குடிமக்கள் (Senior Citizens) இன்றும் தங்களுடைய சமூகத்துக்கு மிகப் பெரும் பங்களிப்பினை ஆற்றுவதோடு மட்டுமல்லாது, அவர்கள் எங்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான நல்ல படிப்பினைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்து எம்மை நல்வழிப்படுத்துகின்றனர்.

இன்று உலக மூத்த குடிமக்களின் தினமாகும். 

மூத்த குடிமக்களின் பிரச்சினைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி,  அதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

1988 ஆகஸ்ட்  19ஆம் திகதி  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதியினை அமெரிக்காவின் தேசிய மூத்த குடிமக்கள் தினமாக பிரகடனப்படுத்தினார். 

அதனைத் தொடர்ந்து,  முதன் முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது  1990  டிசம்பர்  14 அன்று இத்தினத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

விஞ்ஞானம், மருத்துவம், உளவியல், அரசியல், ராஜதந்திரம், அறிவியல், மனித உரிமைகள் போன்ற பல்வேறுபட்ட துறைகளின் முன்னோடிகளாக மூத்த பிரஜைகள் தங்களது பங்களிப்பினை தேசத்துக்கும் உலகத்துக்கும் ஆற்றி இருக்கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பு, தியாகம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தங்களது துறைகளில் காட்டிய ஆர்வம், அதன் மூலம் தமது நாட்டுக்கு வாழ்நாள் பூராவும் ஆற்றிய சேவைகளை நினைவுபடுத்தி அவர்களை  பாராட்டுவதற்கு வழிவகுப்பதாக இத்தினம் அமைகிறது. அவர்களிடம் இருக்கின்ற அறிவு, விவேகம், அனுபவம் , ஆகியவற்றை நாம் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்வதன் ஊடாக, அவர்கள் நாம் வாழும் இந்த உலகில் எத்தகைய பங்களிப்பினை அளித்திருக்கிறார்கள் என அறிந்து அதற்குரிய மரியாதையை செலுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

"நிறைகுடம் தளும்பாது. குறைகுடம் தளும்பும்"   என்பதற்கான எடுத்துக்காட்டுக்கு உரியவர்கள் அவர்கள். அவர்களது ஈடிணையற்ற பங்களிப்பினை நினைவுகூர்ந்து,  அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது அரசாங்கங்களினதும் தனிநபர்களினதும்  கடமையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையினது அறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள அறுபது வயதினைக் கடந்த மனிதர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 120 கோடியாகவும்,  2050ஆம் ஆண்டளவில் இரண்டு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், அதாவது  உலக சனத்தொகையில் 20%க்கு மேற்பட்டவர்கள், மூத்தக்  குடிமக்களாக இருப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த மூத்த குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அபிவிருத்தி அடைந்து வரும்  நாடுகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களுள் பெரும்பாலானோர்  ஆசிய கண்டத்தை  சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும்  எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களது நரைமுடிகள்,  அவர்களால் பாவிக்கப்படும் ஊன்றுகோல்கள் ஆகியன அவர்களது பலவீனங்கள் அல்ல. மாறாக, அவை அவர்களது தன்னம்பிக்கை, சுய கௌரவம், அறிவு மேம்பாடு, தெளிவான ஞானம், தீர்க்கமான சிந்தனை, சுதந்திரம் ஆகியன  மேம்பட்டு காணப்படுவதன் அடையாளங்கள் ஆகும். அவர்களது வயது என்பது கணித ரீதியிலான ஓர் எண்ணிக்கை மட்டுமே! அவர்களுக்கு அவை உள ரீதியான பின்னடைவினை ஏற்படுத்த மாட்டாது. மாறாக, அவை அவர்களை ஊக்குவிக்கும் உன்னத செயற்பாடுகளைக் கொண்டவையாகும்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பு காணப்பட்டது. இன்று தனித் தனிக் குடும்பங்களாக வாழ்க்கை முறைமை மாறிவிட்டதாலும், சுயநலமிக்க உலகமாகவும் சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு அபரிமிதமாகவும் வளர்ந்துவிட்டதால் வீடுகளும் கூட இன்று அமைதி மிக்க இடமாக மாறிவிட்டது. இதனால் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் முதியவர்களிடம் மனம் விட்டு கதைக்கும் பண்பானது அருகி வருகிறது. இதன் காரணமாக முதியவர்கள் தனித்து விடப்பட்டதொரு சூழ்நிலையை உணர்கின்றனர்.

முதியவர்களை பாரமென்று கருதும் இன்னுமொரு கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. இதனால்தான் முதியோர் இல்லங்கள் ஆதரவற்ற அவர்களை பராமரிக்கும் பணியினை முன்னெடுத்துச் செல்கிறது போலும்.

மூத்த குடிமக்களது அறிவு, ஆற்றல், அனுபவம் என்பன எதிர்கால சந்ததியினருக்கான வழிகாட்டிகள் ஆகும். இவற்றை இன்றைய தலைமுறையினர் சரியாக பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

இவர்களது வயது, திறமைகளை கருத்திற்கொண்டு  இவர்களுக்கு ஏற்ற மதிப்பினை வழங்குவதோடு அவர்களுடைய  அறிவையும் விவேகத்தையும் நடைமுறை அறிவினையும்  பெற்றுக்கொள்வதன் மூலமாக நாம் எவ்வாறு திறமையாக செயற்படலாம் என்பதையும் இளைய சமூகத்தினர் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

"வாழ்நாள் முழுவதும் உழைத்து, குடும்பங்களை வளர்த்து, எண்ணற்ற வழிகளில் இந்த தேசத்தின் வெற்றிக்கு பங்களித்த, மூத்த குடிமக்கள் கண்ணியத்துடன் ஓய்வுபெற தகுதியானவர்கள்"  என்ற அமெரிக்க நாட்டு அரசியல்வாதியான  சார்லி கோன்சலஸின் கருத்து சிந்தனைக்கு உரிய ஒன்றாகும்.

உலக மக்களின் வாழ்க்கைக்கு சிறந்த இடமாக இந்த உலகை மாற்றி அமைத்ததற்கும், அவர்களது அறிவு, ஆற்றலால் எதிர்கால சந்ததியினரை  வளம் மிக்க பிரஜைகளாக மாற்றி அமைத்ததற்கும்,  எமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்கள் ஆற்றிய, ஆற்றி வருகின்ற உயர்ந்த சேவைகளுக்கும் எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 

நன்றி வீரகேசரி


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்