டொனால்டு ட்ரம்ப் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல்... பொலிஸார் நடவடிக்கை
23 ஆவணி 2024 வெள்ளி 09:26 | பார்வைகள் : 1502
சமூக ஊடகத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த அரிசோனா மாகாண நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் டொனால்டு ட்ரம்ப், பரப்புரையின் ஒரு பகுதியாக மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள Cochise மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே 66 வயதான Ronald Lee Syvrud என்பவர் ட்ரம்புக்கு எதிராக சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே விஸ்கான்சின் மாகாணத்தில் குறித்த நபருக்கு எதிராக பல்வேறு கைதாணைகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
தன் மீதான கொலை மிரட்டலுக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், மோசமான நபர்களுக்கு எதிராக தான் செயல்பட முடிவு செய்துள்ளதால், அவர்களால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் வியப்பில்லை என்றார்.
நவம்பர் 5 ஆம் திகதி தேர்தல் முன்னெடுக்கப்படும் நிலையில், ட்ரம்ப் மீது விடுக்கப்படும் இன்னொரு அச்சுறுத்தல் இதுவென கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை அச்சுறுத்தியதாக வர்ஜீனியா நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதற்காக நியூ ஹாம்ப்ஷயர் நபர் ஒருவர் டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
ஜூலை மாதம், ட்ரம்ப் மீது முன்னெடுக்கப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் நூலிழையில் தப்பியுள்ளார். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், தன் மீது கொலை மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளதும், படுகொலையில் இருந்து தப்பியுள்ளதையும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தமக்கு அளவுகடந்த மரியாதை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.