உக்ரைன் மற்றும் ரஷ்ய போர்... இருவேறு பகுதிகளில் முன்னேறும் இரு தரப்பு
23 ஆவணி 2024 வெள்ளி 11:12 | பார்வைகள் : 2255
உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பமாகி 912 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில் இரு தரப்பும் இருவேறு பகுதிகளில் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக ஊடுருவலை முன்னெடுத்துள்ள உக்ரைன் படைகள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா உட்பட நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தாலும், தங்கள் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் எவ்வாறு அல்லது எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
உக்ரைன் படைகள் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல கிராமங்களை கைப்பற்றி முன்னேறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் Pokrovsk பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருவதுடன், தங்களுக்கு சாதமாகவே நிலைமை இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களையும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தாலும், உக்ரைன் இதுவரை உறுதி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, ரஷ்ய துறைமுகமான Kavkaz-ல் வியாழக்கிழமை உக்ரைன் தரப்பு முன்னெடுத்த தாக்குதலில், எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று கவ்காஸ் என குறிப்பிட்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசமான கிரிமியாவிற்கும் எரிபொருள் அனுப்ப பயன்பட்டு வருகிறது.
எரிபொருள் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு 125 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான நவீன ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.
மிக விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் விஜயத்திற்கு முன்னர் போலந்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எந்த மோதலையும் போர்க்களத்தில் தீர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று 33 ஆண்டுகளில் உக்ரைன் பயணத்தை மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, 45 ஆண்டுகளில் போலந்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்றும் கூறப்படுகிறது. ஆனால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா இதுவரை கண்டித்ததில்லை என்பதுடன் ரஷ்யாவுக்கு எதிரான நிலையை இந்தியா இதுவரை எடுத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.