பிரித்தானியாவில் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிரான இனவெறுப்பு
24 ஆவணி 2024 சனி 07:25 | பார்வைகள் : 1450
பிரித்தானியாவில் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிரான இனவெறுப்பு அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, இனவெறுப்பைக் கட்டுப்படுத்துமாறு பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியா இனப்பாகுபாட்டைக் கையாள்வது தொடர்பில் நான்கு ஆண்டுகளாக ஐ.நாவால் மேற்கொள்ளப்பட்டு வந்த மீளாய்வு ஒன்றின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
பிரித்தானியாவில் இனவெறுப்பு வெளிப்படும் விதம் மிகவும் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், குறிப்பாக, சாலையில் செல்லும்போது, குறிப்பிட்ட சில பிரிவினர் குறிவைக்கப்பட்டு பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும், பொலிசார் மிக பயங்கரமான அளவில் அவர்கள் மீது பலத்தைப் பிரயோகிப்பதாகவும் ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.
ஜிப்சிகள், ரோமாக்கள், பயணிகள், ஆப்பிரிக்க நாட்டவர்கள், ஆசிய அல்லது அரேபிய இனத்தவர்கள், யூடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆகியோர் குறிவைக்கப்பட்டு, பயங்கரமான அளவில் அவர்கள் மீது வெறுப்புக் குற்றச் செயல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.
கருப்புனத்தவர்களான பிள்ளைகள் அதிக அளவில் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, உடை அகற்றப்பட்டு பொலிசாரால் சோதிக்கப்படுவது கவலையை அளிப்பதாக ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.
இனவெறுப்புக் குற்றங்களுக்கும் பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள ஐ,நா, சமீபத்தில் பிரித்தானியா முழுவதும் கொழுந்து விட்டு எரிந்த வன்முறைக்கு காரணமான வலதுசாரியினர் மற்றும் வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் கொண்டவர்களின் இனரீதியான நடவடிக்கைகள் மற்றும் வன்முறை கவலையை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அடிமைத்தனத்தில் பிரித்தானியாவின் பங்குக்காக அந்நாடு வெளிப்படையாக மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்ளவும், காலனி ஆதிக்கம் மற்றும் அடிமைப்படுத்தப்பட்டவர்களை கடத்துவதன் தாக்கத்தும், இன்றைய இனவெறுப்புக்கும் உள்ள தொடர்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பிரித்தானியா தீவிர முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் ஐ.நா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.