Paristamil Navigation Paristamil advert login

அடிமை வியாபாரம் ஒழியட்டும்!

அடிமை வியாபாரம் ஒழியட்டும்!

24 ஆவணி 2024 சனி 09:33 | பார்வைகள் : 284


அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் சர்வதேச தினம் ஒகஸ்ட் 23 

மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் சுதந்திரமாக வாழவே ஆசைப்படுகிறோம். சுதந்திரம் என்பது ஒரு தனிமனிதனின் உயிர்மூச்சு. 

எந்தவொரு கட்டத்திலும் அடிமைகளாக வாழ எவருமே விரும்புவதில்லை. ஆயினும், இன்று உலகில் அடிமை வியாபாரம் முற்றிலும் நீங்கிவிட்டதா அல்லது தொடர்ந்தும் மறைமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா என்பது எம்முள் ஏற்படுகின்ற ஒரு வினாவாகும்.

இன்றைய காலகட்டத்தில் அடிமை விற்பனை முறைகள் பல்வேறுபட்ட வித்தியாசமான  வடிவங்களில் நடைபெற்று வருவதனை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்றைய தினம் (ஆகஸ்ட் 23) "அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் சர்வதேச நாள்" ஆகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும் அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும்  நினைவூட்டுவதற்காக 1998ஆம் ஆண்டு முதல்  ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி இத்தினம்  அனுஷ்டிக்கப்படுகிறது. 

குறிப்பாக, 1998 ஆகஸ்ட் 23ஆம் திகதி ஹெய்டி நாட்டிலும், 1999 ஆகஸ்ட் 23ஆம் திகதி  செனகல் நாட்டிலுள்ள கோரியிலும் இத்தினம்  கொண்டாடப்பட்டது.

யுனெஸ்கோவின் 29ஆவது கூட்டத் தொடரில் 29 C /40 என்ற  பிரேரணைப்படி, ஒவ்வொரு வருடமும் 1998ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதியிலிருந்து இத்தினம் நினைவுபடுத்தப்படுகிறது.

இது சம்பந்தமாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம், 1998 ஜூலை 29 என திகதியிடப்பட்ட  C L/3494 இலக்க சுற்றறிக்கையினை அனைத்து   நாடுகளின் கலாசார அமைச்சர்களுக்கும் அனுப்பியதோடு, அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் விடுத்திருந்தார்.

அன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கத்துவம்  வகிக்கும் அனைத்து நாடுகளாலும்  இத்தினம் நினைவுகூரப்படுகிறது.

1791 ஆகஸ்ட் 22ஆம் திகதி இரவும், அதற்கடுத்த தினமான  23ஆம் திகதியும் செயிண்ட்-டொமிங்குவில், island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி நாடு) அடிமைத்தனம் மற்றும் மனிதமயமாக்கலின் முடிவுக்கு கலகம் செய்ய வழிவகுத்த ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவை கெளரவிக்கும் நாள் இன்றாகும்.

அடிமை வியாபாரத்துக்குப் பலியான சுமார் 15 மில்லியனுக்கு மேற்பட்டோரை ஞாபகமூட்டும் ஒரு தினமாக இத்தினம் கருதப்படுகின்றது.  

1790ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தால் 480,000க்கு மேற்பட்ட மக்கள் அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இவ்வாறான அடிமைத்தளையிலிருந்து விடுதலை என்னும் சுதந்திரக் காற்றை மக்கள் அனுபவித்த நாள் இன்றாகும்.

இத்தினத்தின் 2023ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின்  கருப்பொருளாக, "மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி மூலம் அடிமைத்தனத்தின் பாரம்பரிய இனவெறியை எதிர்த்துப் போராடுதல்" என்பதாக அமைந்திருந்தது.

அடிமை முறையின் பிரதான காரணம் மற்றவர்களை அடக்கி ஆளும் மேலாதிக்க சிந்தனையும், பொருளாதார ரீதியான பேராசையும், தான் சொல்லும் கடமைகளை எதிர்ப்பின்றி செய்ய வேண்டும் என்ற ஆணவமிக்க எதிர்பார்ப்பும் ஆகும்.

பண்டைய  மன்னராட்சியில் இருந்து ஆரம்பித்த இந்த முறைமையானது இன்றைய ஜனநாயக ஆட்சிக்கால கட்டங்களிலும், உலகின் சில இடங்களில் தொடர்ந்தும் நடைபெற்று வருவதை நாம் பத்திரிகைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

சர்வாதிகார ரீதியில் இயங்கும் சில நாடுகளில் வாழும் மக்கள், ஆட்சியாளருக்கு எதிராக எதனையும் செய்யத் திராணியற்றவர்களாக, அடிமைகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமை வேதனையானதே!

அடிமை வணிகம் எனும்போது, சிறுவர் தொழிலாளர்கள், வீடுகளில் பணி புரியும் பணிப்பெண்கள், ஆட்கடத்தல், கட்டாய சேவை, இளவயதில் திருமணம், அரசியல் பொருளாதார ரீதியான கடத்தல்கள், பலவந்த விபச்சாரம் போன்ற பலவற்றை நாம் குறிப்பிடலாம். 

இந்த அடிமை வணிக முறையானது வயது, பால்,  இன, மொழி பாகுபாடின்றி தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இன்றும்  இனப் பாகுபாடு, ஓரங்கட்டப்படுதல் மற்றும் ஒதுக்கப்படுதல் ஆகியவற்றை தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர். 

காலனித்துவ ஆட்சி, அடிமைப்படுத்தல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றில் வேரூன்றிய அரசியல், பொருளாதார மற்றும் அடிப்படை வசதிகளில்  ஏற்றத்தாழ்வுகள்,  சமவாய்ப்பின்மை போன்ற அம்சங்களால்   நீதி மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உலகம் முழுவதும் 40.3 மில்லியன் மக்கள் இன்றும் நவீன அடிமைத்தன முறைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கட்டாய உழைப்பில் 24.9 மில்லியன் மக்களும், கட்டாய திருமணத்தால் 15.4 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக சில தரவுகளின் மூலம் அறிய முடிகிறது.

நாட்டுக்கோ சமூகத்துக்கோ கலாசாரத்துக்கோ தனிப்பட்ட நபருக்கோ உலகில் யாரும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.  ஆனால், நடைமுறை உலகில் இது எந்தளவுக்கு சாத்தியமாக உள்ளது என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இளம் சிறார்களை வேலைக்கு அனுப்பும் செயற்பாடுகள் கூட அடிமை முறைகளை ஒத்ததாகத்தான் காணப்படுகிறது. 

கடந்த காலங்களில் மலையகத்திலிருந்து தொழில் நிமித்தம் வீட்டு வேலைக்காக சென்ற சிறுமிகள் மீதான துன்புறுத்தல்கள், அவர்களின் மரணங்கள் ஆகியன சம்பந்தமாக அவ்வப்போது போராட்டங்கள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு சரியான நீதிகள் வழங்கப்பட்டிருந்தனவா அல்லது தீர்ப்புக்களின் முடிவுகள் என்னவாகின என்பன இன்றும் வெளிவராத உண்மைகள் ஆகும்.

இதேபோல, பல்வேறு நாடுகளிலிருந்து  மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுச் செல்பவர்களும் அடிமை வியாபாரத்துக்கு உள்ளாக்கப்படுவதாக அவ்வப்போது பத்திரிகைச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இவ்வாறான அடிமை வியாபாரம், அதன் மூலம் ஏற்படும்  துன்புறுத்தல்கள், சித்திரவதைகள், தொடர்ந்தும் நடைபெறக்கூடாது என்பதனை தெளிவுபடுத்தவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அடிமை வணிக முறைகள் இந்த உலகிலிருந்து முழுமையாக களையப்படுவது அவசியமாகும். இதற்கு இன, மத, மொழி, நிற பேதமற்ற வகையில் நாடுகளும் மக்களும் மனிதத்துவத்துடன் செயற்படல் அவசியமாகும். 

தனி மனித உரிமையைப் போல சமூகத்தில் உள்ள   அனைவரினது உரிமைகளையும் மதிக்கும் நிலையை அனைவரும் வளர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். 

அடிமைத்தன முறையை ஒழிப்பதற்கும், மனித கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், நாட்டு அரசாங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் , பொதுமக்கள், அரசின் கண்காணிப்பு அமைப்புகள் போன்றன ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலே இன்றைய காலத்தின் தேவையாகும். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்