கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 பயணிகள் கைது!
24 ஆவணி 2024 சனி 17:12 | பார்வைகள் : 2584
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் பெட்டிகளுடன் இரண்டு விமானங்களில் வந்த நான்கு பயணிகளை விமான நிலைய சுங்க பிரிவினர் நேற்று சனிக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 1.38 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 462 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் பெட்டிகள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று பயணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (23) அபுதாபியிலிருந்து விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இருவர் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் மற்றயவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
இவர்களிடமிருந்து பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "மான்செஸ்டர்" சிகரெட்டுகளின் 345 சிகரெட் கார்ட்டூன்களை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்படடுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மற்றய பயணி நேற்று வெள்ளிக்கிழமை (23) சாஜா நகரிலிருந்து விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
இவரிடமிருந்து பயணப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மான்செஸ்டர் சிகரெட்டுகளின் 117 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி, 92,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 462 சிகரெட் கார்ட்டூன்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகளையும் சுங்க விசாரணை பிரிவின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன் நான்கு பயணிகளும் நான்கு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.