Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 23 பயணிகள் கடத்திக் கொலை

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 23 பயணிகள் கடத்திக் கொலை

27 ஆவணி 2024 செவ்வாய் 07:14 | பார்வைகள் : 1702


பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 23 பயணிகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்துகள், பிற வாகனங்களை நிறுத்தி குறிப்பிட்ட சில இனத்தவரை மட்டும் பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், முசகேல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், திங்கட்கிழமை அதிகாலை பயணிகள் பேருந்து, லாரி, வேன் ஆகியவைகளை பயங்கரவாதிகள் வழிமறித்திருக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து, வாகனங்களில் இருந்தவர்களின் அடையாள அட்டைகளை அவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற பயங்கரவாதிகள், அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர். 

இந்தத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். 

மேலும், 5 பேர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரை குறி வைத்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “பஞ்சாப் மாகாணத்தை பலுசிஸ்தானுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் வாகனங்களை நிறுத்தி சில பயணிகளை கடத்திச் சென்றனர். 

பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். 

அதைத் தொடர்ந்து, 10 வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்துள்ளனர். பஞ்சாபிற்குச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன, மேலும் பஞ்சாபைச் சேர்ந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை பலுசிஸ்தான் - பஞ்சாப் நெடுஞ்சாலையில் நடந்திருக்கின்றன. 

பலுசிஸ்தான் பிரிவிணைவாதிகள் பஷ்துன் இனத்தவரை இவ்வாறு படுகொலை செய்வது பாகிஸ்தான் அரசுக்கு நீண்டகால சவாலாகவே இருந்து வருகிறது. 

இன்றைய சம்பவமும் இதே பாணியில் பலுச் இனத்தவரை விட்டுவிட்டு பஷ்துன் இனத்தவரை மட்டும் கண்டுபிடித்து நடத்தப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்