Paristamil Navigation Paristamil advert login

ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு

ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு

28 ஆவணி 2024 புதன் 07:51 | பார்வைகள் : 3261


ஐசிசியின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்பார்த்தது போலவே எந்த தேர்தலும் இன்றி தலைவர் பதவிக்கு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜெய் ஷா தனது 35 வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) இளைய தலைவரானார்.

தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லேவுக்கு (Greg Barclay) அவர் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெய் ஷா டிசம்பர் 1, 2024 அன்று புதிய தலைவராக பொறுப்பேற்பார்.

ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து ஷா மகிழ்ச்சி தெரிவித்தார். உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார்.

"ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐ.சி.சி குழு மற்றும் உறுப்பு நாடுகளுடன் கிரிக்கெட்டை உலகளாவியதாக மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.

தேவைப்பட்டால், கிரிக்கெட்டின் வடிவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் கொண்டு வருவோம். கிரிக்கெட்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம்.

லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துவது விளையாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பாரிய புரட்சிகர முடிவாகும். எனவே, கிரிக்கெட் மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஜெய் ஷா கூறினார்.

பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா 2019 அக்டோபரில் பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து அவர் இந்தப் பதவியை வகித்து வருகிறார். ஷா ஜனவரி 2021 முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

தற்போது அவர் ஐசிசி சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்? ஏ.சி.சி.யின் தலைவர் யார்? இது ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்