Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு எதிரான வன்முறை: ஜனாதிபதி வேதனை

பெண்களுக்கு எதிரான வன்முறை: ஜனாதிபதி வேதனை

29 ஆவணி 2024 வியாழன் 04:59 | பார்வைகள் : 572


மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'பெண்களுக்கெதிரான வன்முறைகள் போதும் போதும்' என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். ஞாபக மறதியில் இருந்து விடுபட்டு, நாடு விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என அவர் கூறியுள்ளார்.

பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின், 77வது ஆண்டையொட்டி, அதன் ஆசிரியர் குழுவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.

அப்போது, பல விஷயங்கள் குறித்து அவர்களுடன் விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, 'பெண்களின் பாதுகாப்பு - போதும் போதும்' என்ற தலைப்பில், தன் கையெழுத்துடன் கூடிய கட்டுரையை அவர் கொடுத்துள்ளார்.

 சுயபரிசோதனை

அந்தக் கட்டுரையில், பெண்களின் பாதுகாப்பு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கு குறித்து விரிவாக எழுதியுள்ள அவர், நாட்டு மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்து, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தடுக்க விழித்தெழ வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கட்டுரை:

சமீபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், இந்தப் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதில் இருந்து தீர்வு காண நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கோல்கட்டா மருத்துவமனையில் இளம் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது, நாட்டு மக்களை உலுக்கிஉள்ளது.

இந்தக் கொடூர சம்பவத்தைக் கேட்டபோது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இது ஏதோ மிகவும் அபூர்வமாக நடப்பதல்ல; பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளில் இதுவும் ஒன்று என்பது, மிகவும் வேதனை அளிக்கிறது.

மாணவர்கள், டாக்டர்களுடன், பொதுமக்களும் கோல்கட்டாவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், குற்றவாளிகள் எங்கேயோ பதுங்கியுள்ளனர். மழலையர் பள்ளியில் படிக்கும் இளம் சிறுமியரும் இது போன்றவர்களிடம் பலிகடாவாகியுள்ளனர்.

எந்த ஒரு நாகரிக சமூகமும், தன் மகள், சகோதரிக்கு இது போன்ற கொடூரம் நடப்பதை சகித்துக் கொள்ளாது. இதை எதிர்த்து நாடு கொதித்தெழ வேண்டும்; நானும் அப்படித்தான்.

கடந்தாண்டு மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக என் கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன். இந்த விஷயத்தில் நான் நேர்மறையுடன் உள்ளேன்.

நம் முந்தைய சாதனைகளால், முயற்சிகளால் பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதற்கு ஒரு உதாரணமாக என்னையே நான் கூறிக் கொள்வேன். அதே நேரத்தில், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகமாக நடப்பது, மிக மிக வேதனை அளிப்பதாக உள்ளது.


நேர்மை

சமீபத்தில் ரக் ஷா பந்தன் நிகழ்ச்சிக்காக, ஜனாதிபதி மாளிகைக்கு, சில பள்ளிக் குழந்தைகள் வந்திருந்தனர். அதில், 'நிர்பயா போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் எங்களுக்கு நடக்காது என்ற உறுதி கிடைக்குமா?' என்று ஒரு சிறுமி மிகவும் வெகுளித்தனமாக கேட்டார்.

'இந்த நாடும், அரசும், ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிலும் உறுதியாக உள்ளது. இருப்பினும், தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; அதன் வாயிலாக வலுவாக முடியும்' என்று கூறினேன்.

ஆனால், இது மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து விடுமா... அதை உறுதிசெய்யும் பதிலை அளிக்க வேண்டியது நம் சமூகம். அது நடப்பதற்கு, முதலில் நாம் நம்மை மிகவும் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இல்லாமல் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

நம்மை நாமே மிகவும் கடினமான கேள்வியை கேட்க வேண்டிய நிலையில் நம் சமூகம் உள்ளது.

நாம் எங்கு தவறு செய்தோம்... அந்தத் தவறுகளை களைவதற்கு என்ன செய்தோம்... இவற்றுக்கு பதில் கிடைக்காமல், மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ளவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.

இதற்கு பதில் கண்டுபிடிப்பதற்கு முன், முதலில் அதை சரியாக புரிந்து கொள்வோம்.

மற்ற நாடுகளில் பேசப்படாத நிலையில், நம் அரசியலமைப்பு சட்டம், பெண்களுக்கும் சம உரிமையை வழங்கியது. அதை எங்கெல்லாம் உறுதி செய்ய முடியும் என்பதற்காக அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன; இதற்கான முயற்சிகள், திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசின் இந்த முயற்சியில், நாகரிக சமூகமும் தன்னை இணைத்துக் கொண்டது.


பல்வேறு சீர்திருத்தவாதிகள், தொலைநோக்கு பார்வையாளர்கள், பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதற்காக போராடினர். அதே நேரத்தில், பல பெண்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு பலன்கள் கிடைப்பதற்கான சமூக புரட்சியில் ஈடுபட்டனர். இந்த வகையிலேயே பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தது.

ஆனால், இந்தப் பயணத்தில் பல தடைகள், எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது. ஒவ்வொரு அங்குலம் முன்னேறுவதற்கும், கடுமையாக போராட வேண்டியிருந்தது.

இதற்கிடையில், சமூக காரணங்கள், மத சம்பிரதாயங்கள் என பலவும், பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்துக்கு எதிராக அமைந்தன. இந்த மனப்போக்கை, ஆணாதிக்கம் என்று சொல்ல மாட்டேன்; இது போன்ற எண்ணங்கள் இல்லாமலும், பல ஆண்கள் உள்ளனர்.

பெண்களை குறைத்து மதிப்பிடுவது, தங்களை விட அதிகாரம் குறைந்தவர்கள், தகுதி குறைந்தவர்கள், குறைந்த புத்திகூர்மை உள்ளவர் என்று கருதுவது மோசமான மனப்போக்கு. இந்த மனப்போக்கு உள்ளவர்கள், பெண்களை ஒரு பொருளாகவே பார்க்கின்றனர்.

இந்த அடிப்படை எண்ணங்கள் தான், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணம். இந்த எண்ணம் மக்களிடையே அடிமனதில் ஆழ பதியப்பட்டுள்ளது. இது, நம் நாட்டில் மட்டுமல்ல; உலகெங்கும் உள்ளது. நாட்டுக்கு நாடு, மனிதர்களுக்கு மனிதர் இடையே அளவுதான் வேறுபடுகிறது.

இந்த மனப்போக்கில் இருந்து விடுபட, நாடும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக இதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்காக பல சட்டங்கள், இயக்கங்கள் உருவாகின. ஆனாலும், அந்த மனப்போக்கும், வன்முறைகளும் நம்மை பீடித்துள்ளன.

கடந்த 2012 டிசம்பரில், இது போன்ற மனப்போக்கு உள்ளவர்களால் தான், டில்லியில் இளம் பெண் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் உருவாக்கியது. இது போன்ற சம்பவம் மற்றொரு நிர்பயாவுக்கு ஏற்படக்கூடாது என்று அனைவரும் நினைத்தனர். அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், இந்த முயற்சிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பெண்கள் தங்களை பாதுகாப்பாக உணரும் நிலை இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

டில்லியில் அந்த சம்பவம் நடந்து, 12 ஆண்டுக்குப் பின், அதுபோல பல சம்பவங்கள் நடந்தன. அதில் சில தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், நாம் இதில் இருந்து பாடம் கற்றோமா? சமூகப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின், இது போன்ற சம்பவத்தை நாம் மறந்து விடுகிறோம்!

மற்றொரு சம்பவம் நடக்கும்போது தான், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான உணர்வு மீண்டும் எழுகிறது.

இந்த ஒட்டுமொத்த அம்னீஷியா எனப்படும் ஞாபக மறதி தான், மிகவும் கொடூரமானது; இது தான், நான் கூறும் அந்த மனப்போக்கு.

வரலாறு நமக்கு அவ்வப்போது வலியை ஏற்படுத்துகிறது. ஆனால், அந்த வரலாற்றை திரும்பிப் பார்க்க இந்த சமூகம் பயப்படுகிறது. நெருப்புக் கோழி போல், மண்ணுக்கு அடியில் தன் தலையை மூடிக் கொள்கிறது.

போதும் போதும்... இதற்கு மேலும் நாம் காத்திருக்க வேண்டாம். வரலாற்றை திரும்பிப் பார்ப்போம். அதில் இருந்து பாடம் கற்போம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் ஏன், எப்படி நடக்கிறது என்பதை நமக்கு நாமே கேள்வி எழுப்பி, அது நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முன்வருவோம்.

இது போன்ற குற்றங்களின் நினைவுகள், நம்முடைய ஞாபக மறதியை வீழ்த்த வேண்டும். இந்த சமூகக் கேட்டை, நாம் அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்து எதிர்ப்போம்; போராடுவோம். இதற்கு, பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை நம் சமூகத்தில் புகுத்தி, நாம் எங்கே செயலிழந்தோம் என்பதை தெரிவித்து, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க உறுதி ஏற்க வேண்டும்.

பயத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு, நம் மகளுக்கு தடையாக உள்ளவற்றை நீக்க வேண்டியது நம் கடமை. அடுத்த ரக் ஷா பந்தன்போது, அப்பாவி குழந்தைக்கு மிகவும் உறுதியான பதிலை நாம் அனைவரும் ஒன்றாக அளிப்போம்.

இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

'உண்மையின் பக்கம் நில்லுங்கள்!'

பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் 77வது ஆண்டையொட்டி, அதன் ஆசிரியர் குழுவைச் சந்தித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதன் பங்களிப்புக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். அவர் கூறியதாவது:நாட்டின் வளர்ச்சியில், சமூகத்தின் கட்டமைப்பில், நான்காம் துாணாக ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்கும், பொறுப்பும் உள்ளது. ஊடகங்கள் பயமின்றி செயல்பட வேண்டும். அதே போல், உண்மையின் பாதையில் இருந்து விலகிவிடக் கூடாது. உண்மையின் பக்கமே ஊடகங்கள் எப்போதும் இருக்க வேண்டும். நம் நாடு குறித்து நேர்மையாக, நேர்மறையாக உலகுக்கு காட்சிப்படுத்த வேண்டும்.பத்திரிகையாளர்களாக இருந்தாலும் நீங்கள் இந்த நாட்டின் குடிமகன். நானும் தனிப்பட்ட முறையில் இந்த நாட்டின் குடிமகன். இதனால், சில விஷயங்களை பார்க்கும்போது கோபம், ஆதங்கம் ஏற்படுகிறது. பெண்களை ஒரு பக்கம் கடவுளாக வழிபடுகிறோம். அதே நேரத்தில் மறுபக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடக்கின்றன. நம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்