மூன்று நண்பர்களின் வெற்றிக் கதை.
15 ஆடி 2023 சனி 15:46 | பார்வைகள் : 9912
அந்த மூன்று நண்பர்களுக்கும் எப்படியாவது வியாபாரத்துறையில் ஈடுபட்டு பெரிய பணக்காரர்கள் ஆகிவிட வேண்டும் என்பது கனவு. அதுவே அவர்களின் நோக்கம், குறிக்கோள், இலட்சியம்.. எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம்.
என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். அந்நாளில் உலகில் பல முன்னணி நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் மளமளவென்று உருவாகி, உலகம் முழுவதும் பரவ ஆரம்பிக்கின்றன. அமெரிக்கர்களின் இந்த பொருளாதாரப் பாய்ச்சல், பிரான்சில் இருந்த இந்த மூன்று நண்பர்களையும் சிந்திக்க வைத்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் பொருளாதாரக் கருத்தரங்குகள் பற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்தன. ‘நீங்களும் பணக்காரர் ஆகலாம்’ ‘வியாபாரம் ஆரம்பித்து வெற்றி பெறுவது எப்படி?’ போன்ற விளம்பரங்கள் இந்த மூன்று நண்பர்களையும் தூங்கவிடாமல் செய்தன.
யோசித்தார்கள். கைகளில் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு, அந்த விளம்பரங்களை மீண்டும் மீண்டும் வாசித்தார்கள். ஒளி தெரிந்தது. வழி பிறந்தது. ஆம்.. மூன்று நண்பர்களும் அமெரிக்காவுக்குப் பறந்தார்கள்.
அங்கே நடந்த பொருளாதாரக் கருத்தரங்குகள், செயலமர்வுகள், கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டார்கள். நிறையவே கற்றுக்கொண்டார்கள். புதிய உத்வேகம் மனதில் பிறந்தது. வியாபாரம் ஆரம்பித்து வெற்றிக்கொடியை நாட்டிவிட வேண்டும் என்கிற வெறி உடல்முழுவதும் பரவி இருந்தது.
மீண்டும் பிரான்சுக்குப் பறந்து வந்தார்கள். வந்தவேகத்திலேயே Annecy நகரில், ஒரு குறுக்குச் சந்தில் ஒரு சிறிய பெட்டிக்கடையை ஆரம்பித்தார்கள்.
கடை குறுக்குச் சந்தில் இருந்ததால் அதற்கு ‘Carrefour’ என பெயர் வைத்தார்கள். பிரெஞ்சிலே Carrefour என்றால், குறுக்குத்தெரு, குறுக்குச் சந்து என அர்த்தம்.
நண்பர்கள் பெட்டிக்கடை போட்டது 1958 இல். வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பெட்டிக்கடையை ‘பெரிய கடை’ ஆக்கவேண்டிய தேவை நண்பர்களுக்கு வந்தது. பெருப்பித்தார்கள். அவர்களின் வேகத்துக்கு குறுக்குச் சந்து போதவில்லை.Hypermarket, Department store, Supermarket என்று கடைகளில் என்னென்ன வகைகள் உள்ளனவோ அத்தனையையும் ஆரம்பித்தார்கள்.
பெட்டிக்கடையில் ஆரம்பித்து, இன்று உலகம் முழுக்க 13,900 கடைகளுடன் நிமிர்ந்து நிற்கிறது Carrefour. ஐரோப்பாவில் பலவித கடைகளை ஆரம்பித்த முதலாவது குழுமம் என்கிற பெருமையும் Carrefour க்கே கிடைத்தது.
அந்த மூன்று நண்பர்களின் பெயர்கள் Marcel Fournier, Denis Defforey மற்றும் Jacques.
Carrefour இன் கதை தொடரும்..!!