வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதியொருவர் மரணம்

29 ஆவணி 2024 வியாழன் 14:24 | பார்வைகள் : 4037
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதியொருவர் உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த 27ஆம் திகதி தனது நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட யுவதியொருவரை, அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கித் தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த யுவதி வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், மீண்டும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.