தேடுவார் அற்றுக்கிடந்த ரஃபேல் விமானம்.. ’முதல்தர’ போர் விமானம் ஆன கதை!
30 ஆவணி 2024 வெள்ளி 02:17 | பார்வைகள் : 4149
பிரெஞ்சுத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக தற்போது சேபியா நாடு 3 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. மொத்தமாக 12 ரஃபேல் விமானங்களை சேபியா வாங்க உள்ளது.
தேடுவார் அற்ற விமானம்!
1980 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் இந்த ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அப்போது அமெரிக்காவும் F-22 ரக விமானத்தை தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்திருந்தது. இந்த முயற்சியில் முந்திக்கொண்டது அமெரிக்கா. விற்பனையில் பரபரப்பு ஏற்பட, காலதாமதாமாக தனது ரஃபேல் விமானத்தை உலக சந்தைக்கு அறிமுகம் செய்தது பிரான்ஸ்.
அனைத்து விதமான ஆயுதங்களையும் இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையிலும், 10 தொன் எடையைத் தாங்கக்கூடியதாகவும், விமானத்தின் இறக்கைகளில் எரிபொருள் தாங்கியும், துல்லியமான ரேஞ்ச், மின்னல் வேகம் என அனைத்து தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கி, ஏவுகணைத்தாக்குதல்களை அடையாளம் கண்டு அதில் இருந்து தானியங்கி முறையில் விலகக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட இந்த விமானம், கிட்டத்தட்ட இதே வசதிகளுடன் கூடிய F-22 விமானத்திடம் தோற்றுப்போனது.
காலதாமதமான தயாரிப்பே பிரதான காரணமாகிப்போனது. தெரிந்த பேய் இருக்க தெரியாத பிசாசு எதற்கு என, அனைவரும் அமெரிக்க தயாரிப்பை நோக்கி படையெடுக்க, தொழிற்சாலையிலேயே கிடந்தது ரஃபேல் .
இறுதியாக பிரான்ஸ் தவிர்த்து இந்த ரஃபேல் விமானத்தை பிரேஸில் 2013 ஆம் ஆண்டு வாங்கியது. ஆனால் அவர்களுக்கு இந்த விமானம் திருப்த்தியாக அமையவில்லை. போதாதற்கு சந்தையைக் கைப்பற்ற இரஷ்யாவின் Mig மற்றும் Sukhoi விமானங்களும் போட்டிபோட்டன.
அதன் பின்னர் ரஃபேல் விமானம் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டன. 70 மில்லியன் யூரோக்கள் விலை தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர், முதன் முறையாக எகிப்த் 2015 ஆம் ஆண்டில் 5.2 பில்லியன் யூரோக்கள் தொகையைக் கொடுத்து 24 ரஃபேல் விமானங்களை வாங்கியது. பின்னர் கட்டார், இந்தியா, கிரீஸ், துருக்கி என நாடுகள் அணிவகுத்து ரஃபேல் விமானங்களை வாங்கின. இறுதியாக குரோசியா 8 பில்லியன் யூரோக்கள் கொடுத்து 12 ரஃபேல் விமானங்களை வாங்கியது. பின்னர் 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பாய்ச்சலாக 8.1 பில்லியன் யூரோக்களுக்கு 42 விமானங்களை வாங்கியது இந்தோனேசியா.
தற்போது, சேபியா 3 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தத்துடன் 12 விமானங்களை வாங்க கையெழுத்திட்டுள்ளது. பிரான்ஸ் தவிர்த்து ரஃபேல் விமானம் கொள்வனது செய்யும் எட்டாவது நாடு இதுவாகும்.
தேடுவாரற்றுக்கிடந்த இந்த ரஃபேல் விமானம் தற்போது தனிக்காட்டு ராஜா ஆகியுள்ளது.