அம்பானியும், அதானியும் இருக்கும் பட்டியலில் 21 வயது இளைஞருக்கும் இடம்!
30 ஆவணி 2024 வெள்ளி 06:32 | பார்வைகள் : 1692
இந்திய பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள கைவல்யா வோராவுக்கு வயது 21 மட்டுமே; அவரது பங்குதாரரான ஆதித் பலோச்சுக்கு 22 வயதே ஆகியுள்ளது.
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலை நேற்று ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. அதில், கவுதம் அதானி முதலிடம், முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் உள்ளனர். பல்லாண்டுகளாக இந்திய தொழில் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட அம்பானியும், அதானியும் இருக்கும் பட்டியலில், 21 மற்றும் 22 வயது நிரம்பிய இளைஞர்கள் இருவரும் இடம் பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 21 வயது நிரம்பிய இளைஞர் கைவல்யா வோரா, 22 வயது நிரம்பிய இளைஞர் ஆதித் பலிச்சா இருவரும், ஸ்டான்போர்டு பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவராக இருந்து பாதியில் படிப்பை கைவிட்ட நண்பர்கள்.
இருவரும் சேர்ந்து 2021ல் ஜெப்டோ என்னும் விரைவு வணிக செயலியை தொடங்கினர்.கோவிட் காலத்தில், பொருட்களை வீடு தேடிச்சென்று டெலிவரி செய்வதற்கான தேவை அதிகம் இருந்தது.
'கான்டாக்ட்லெஸ் டெலிவரி' என்பது தான் செயலியின் அடிப்படை. அதற்கு தகுந்தபடி தங்கள் நிறுவனத்தை உருவாக்கினர். வாடிக்கையாளர்களுக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்வது தான் இந்த செயலியின் வேலை.
அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றுடன் போட்டியிட்டு இந்த நிறுவனம் அமோக வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக, நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்த இளைஞர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். கைவல்யா வோராவின் சொத்து மதிப்பு 3,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு 4,300 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.