பிரித்தானியாவில் முதல் “நீலநாக்கு வைரஸ்” தொற்று கண்டுபிடிப்பு
31 ஆவணி 2024 சனி 02:38 | பார்வைகள் : 2666
ஐரோப்பா முழுவதும் வேகமாக அதிகரித்து, நீல நாக்கு வைரஸ் பாதிப்பு பிரித்தானியாவிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அகியவற்றில் நீல நாக்கு வைரஸ்(Bluetongue virus) எனப்படும் புதிய தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தெற்கு நோர்போக்கின்(South Norfolk) Haddiscoe பகுதிக்கு அருகே இருந்த செம்மறி ஆடு ஒன்றிடம் இந்த நீல நாக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த “நீலநாக்கு வைரஸ்” மனிதர்களிடையே உயிரிழப்புகளை ஏற்படுத்தாது.
அதே சமயம் கால்நடைகளின் உயிரை பறிக்க கூடியது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2024 மற்றும் 2025ம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில் இதுவே இந்த வைரஸின் முதல் வழக்காக பார்க்கப்படுகிறது.
தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பரவலை கட்டுப்படுத்துவதற்காக நோர்போக்கை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தூரத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நீலநாக்கு வைரஸானது கால்நடைகளான செம்மறி ஆடுகள், ஆடுகள், மான்கள், லாமாக்கள் ஆகியவற்றை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம், நீல நிற மற்றும் வீங்கிய நாக்கு காணப்படும், அத்துடன் காய்ச்சல், பால் உற்பத்தி குறைதல் ஆகிய அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தீவிரமான நேரங்களில் கால்நடைகள் உயிரிழப்புகளும் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பாளர்கள் அடிக்கடி தங்கள் கால்நடைகளை பரிசோதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.