Paristamil Navigation Paristamil advert login

நெருக்கடியில் மனித, சிறுபான்மையினரின் உரிமைகள்

நெருக்கடியில் மனித, சிறுபான்மையினரின் உரிமைகள்

31 ஆவணி 2024 சனி 15:15 | பார்வைகள் : 389


சுவிட்சர்லாந்தின் பிறீபேர்க் மாநிலத்தில் உள்ள கோடைகாலப் பல்கலைக்கழகத்தின் சமஷ்டிக் கற்கைகள் நிலையத்தில் கலாநிதி.ஜேசப் மார்க்கோ ‘சமகாலத்தில் நெருக்கடியில் உள்ள மனித, சிறுபான்மையினரின் உரிமைகள்’ என்னும் தலைப்பில் விசேட உரையாற்றினார். 

கலாநிதி.ஜோசப் மார்க்கோ, கிராஸ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத் தலைவராக உள்ளதோடு, பொஸ்னியா,குரேசியா அரசியலமைப்பு மறுசீரமைப்பின் சர்வதேசக் குழுவின் அங்கத்தவராகவும், பொஸ்னியா,குரேசியா அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ஆஸ்திரியா அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராகவும், சிறுபான்மை உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளராகவும் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பிரதம செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போதும், அரசியலமைப்பு ஏற்பாடுகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய கொள்கைகள் மற்றும் பொறிமுறைகள் வகுப்பதில் செல்வாக்குச் செலுத்தி வரும் கலாநிதி.ஜேசப் மார்க்கோ ஆற்ற உரையின் சுருக்கம் வருமாறு:

சமகாலத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேச ஏற்பாடுகளாக ஐக்கிய நாடுகள் சாசனங்கள், உடன்பாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சாசனங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் காணப்படுகின்றன.

ஆனாலும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய கரிசனைகளும் மற்றும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடித்துக்கொண்டிருக்கின்றன.  

இதற்கான அடிப்படையான காரணமாக இருப்பது, அனைத்து தரப்பினரும் ‘சித்தாந்தங்களை’ மட்டுமே கொண்டிருக்கின்றார்கள். நடைமுறையில் அவற்றின் இலக்குகள் அடையப்படாத நிலைமையே யதார்த்தமாக உள்ளது. 

நாடுகள் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய சித்தாந்தங்களை கொண்டிருந்தாலும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தில் தேசியவாதம் மற்றும் தேசிய தாரண்மைவாதம் ஆகிய இரு விடயங்கள் விவாதத்துக்குரியவையாக தொடர்ந்துமுள்ளன. 

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தேசியவாதம் மற்றும் தாரண்மைவாதம் பற்றிய எனது பார்வையானது ஒருஎடுகோளாக இருந்தாலும்கூட அதுதொடர்பிலான ஆழமானக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு என்ற விடயத்தினைப் பார்க்கின்றபோது, உடல் ரீதியான பாதுகாப்பு, உள ரீதியான பாதுகாப்பு, பல்அடையாளம், ஆகியனவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது.

தேசியவாதம் என்பது பல அடையாளங்களை ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது எனக்கொள்ள முடியாதுள்ளது. தேசியவாதம் என்பது ‘மைய’ நிலையைக் கொண்டிருக்கின்றன நிலைமைகளையே நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது.

இதனால் பல்அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்துவதாக அமைகின்றது. ஆகவே தேசியவாதம் பல்அடையாளங்களை உறுதிப்படுத்தாத தருணங்களில் சிறுபான்மையினரின் உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

தேசியவாதத்தினை மையப்படுத்தப்பட்டுள்ள தருணங்களில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் பற்றிய உரையாடல்களைச் செய்வதாக இருந்தால் சுயாட்சி, ஒருமைப்பாடு, பல்வகை அரசாங்கம் ஆகிய விடயங்கள் சந்தேகங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அடிப்படையாகின்றது.

தேசிய தாரண்மைவாதம் சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களுக்கான சிறப்பு உரிமைகள் என்ற புரிதலை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது,

சிறுபான்மையினரை அச்சுறுத்துவதானது, அவர்களின் சிறப்புரிமைகளை மீறும் நியாயமற்ற செயற்பாடாகும். அது தனிநபர்களை, சிறுகுழுக்களை பாகுபாட்டுக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அத்துடன், மைய தேசிய தாரண்மைவாதத்துக்கு பிரிக்கமுடியாத ஒருமைப்பாடான நாட்டுக்குள் வாழ்ந்துவரும் தரப்பினர் என்பதும் சம அந்துள்ள பிரஜைகள் என்பதும் பற்றிய நம்பகமான புரிதல் ஏற்படுகின்றமையானது அடிப்படை தேவையாக உள்ளது.

தேசியவாதம், தேசிய தாரண்மைவாதத்துக்கு மேலதிகமாக அரசியல்தரப்புக்கள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, அரசியல் தரப்புக்கள் பங்கேற்கும் அரசாங்கம் ‘பல்அடையாளத்தை உறுதி செய்யும் பல்வகைமை அரசாங்கமாக’ இருப்பது இன்றியமையாதவொரு விடயமாகின்றது. இதன்மூலமாக, சிறுபான்மையினரின் உரிமைகளை கணிசமாக பாதுகாக்க முடியும். 

இதனைவிடவும், நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருடைய செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பத்தில் ‘பூகோள அரசியலின்’ தாக்கத்தை அவதானித்தேன். 

குறிப்பாக, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு விடயத்துக்கு முன்னுரிமை வழங்கியுள்ள நாடுகள், தங்களுடைய நடைமுறைகளை மற்றும் தரநிலைகளை ஏனைய நாடுகள் கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

இதன்காரணமாக, அடிப்படையில் தேசியவாதத்தினையும், தேசிய தாரண்மைவாதத்தினையும் மையப்படுத்திய நாடுகளுடன் முரண்படுகள் ஏற்படுகின்றபோக்கு உருவெடுக்கின்றது. 

இந்த நிலைமையானது ஆரம்பத்தில் இருநாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் காலவோட்டத்தில் ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைப்புக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் உருவெடுத்து தீவிரமான துருவப்படுத்தலை தோற்றுவித்து விடுகிறது. 

பூகோள அரசியலால் ஏற்படும் முரண்பாடுகளின் அடிப்படையில் மனிதர்களே இருக்கின்றார்கள். ஆகவே அவ்விதமான முரண்பாடுகளை போக்குவதற்கான வழிகளையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

குறிப்பாக, பூகோள அரசியல் முரண்பாடுகளைப் போக்குவதற்கு ‘உள்ளக கலாசாரங்களுக்கு இடையிலான உரையாடல்’ முக்கியமானதாக அமைகின்றது. இந்த உரையாடல் தவிர்க்க முடியாது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

‘இறைமையுள்ள நாடு’ என்ற அடிப்படையில் ‘ஒரே தேசம், ஒரே அடையாளம்’ என்ற சிந்தனைப்போக்கும் உள்நாட்டில் மட்டுமல்ல, பூகோள ரீதியிலும் எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கின்றன.

ஆகவே, ‘இறைமையுள்ள நாடு’ என்பது ‘பிரிக்கமுடியாத, பிளவுபடுத்த முடியாத நாடு’ என்பதை உறுதிசெய்யும் அடிப்படையிலும், ‘ஒரே தேசம்’ என்பது ‘பல்லின, பல்மத, பல்மொழி’ அடையாளங்களை ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

இதனூடாக, நாடொன்று சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது மட்டுமல்ல, பூகோள ரீதியான முரண்பாடுகளையும் தவிர்ப்பதோடு உலகளாவிய அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் உறுதுணையாக இருக்கின்றது.  

ஜேர்மன் நாட்டை உதாரணமாக பார்க்கின்றபோது, அரசியலமைப்பு ரீதியாக இறைமையுள்ள ஒருதேசத்தினை மையப்படுத்தியதாக இருந்தாலும், பல்அடையாளத்தினை ஏற்றுக்கொள்ளவல்ல ஏற்பாடுகள் மேம்பட்ட நிலையில் காணப்படுகின்றன. 

இதேவேளை, மொழிரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும், மனிதன் என்ற வகையில் ஏனையவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மனோநிலைமையானது அடிப்படையானதொரு தேவையாகவே பார்க்கப்படுகின்றது. 

பிரான்ஸ் நாட்டை எடுத்துக்கொண்டால், ஆரம்பத்தில் ஐ.நா.சானத்தின் 27ஆவது அத்தியாயமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஏற்பாட்டை உள்ளீர்க்கவில்லை. ஏனென்றால் பிரான்ஸ் தனது நாட்டில் சிறுபான்மையினர் இல்லையென்Nறு வாதிட்டது.

எனினும், மொழிவாரியாக, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற நிலைமைகள் ஏற்பட்டமையால், பின்னர் சிறுபான்மையினர் இல்லை என்ற வாதத்தினை பிரான்ஸ் மாற்ற வேண்டியிருந்தது.  

இதேநேரம், பொஸ்னியா தொடர்பில் எனது படிப்பினையை பகிர்ந்துகொள்வதற்கு விரும்புகின்றேன். பொஸ்னியா, குரேசியா ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  

குறிப்பாக பொஸ்னியா, பல்அடையாளங்களைக் கொண்ட தேசம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயாட்சியின் அடிப்படையிலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது பொஸ்னியர்கள் யார், குரோசியர்கள் யார் என்றதொரு மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இதுவொரு அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையாக நான் கருதுகின்றேன்.

மறுபுறத்தில், 7.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்பெய்னின் சுயாட்சிப் பிராந்தியமான கட்டலோனியா தனிநாட்டுக்கோரிக்கயை தீவிரமாக முன்வைத்து வருகிறது. 

அக்காலங்களில் கட்டலோனியாவின் தலைவர், தமது தனிநாட்டுக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தமது நாட்டுக்கு வெளிநாட்டடு பிரஜைகள் எத்தனைபேரும் வரமுடியும். ஆனால் அவர்கள் கட்டலோனிய சுதந்திரப்பிரகடனத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். 

அவ்வாறான நிலைப்பாட்டக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகளை தாங்கள் உள்வாங்குவதற்கு தயாராக இருப்பதோடு அவர்களர் தமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

அவரது கூற்றின் பிரகாரம், வெளிநாட்டுப் பிரஜைகள் கட்டலோனியாவின் சுதந்திரத்தினை ஆதரிக்க வேண்டும் என்பது ஒருவிடயம், அவர்களுக்கான அடையாளத்தினை கைவிட்டு பிறிதொரு அடையாளத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மற்றொருவிடயமாகிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்தல் என்பது மிகமிக முக்கியமான விடயமாகவே நான் பார்க்கின்றேன். 

ஏனென்றால், அவர்களை அடையாள ரீதியாக பாதுகாப்பதன் ஊடாகவே அவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் உட்ட அனைத்தையும் உறுதி செய்து கொள்ள முடியும் என்பது எனது நிலைப்படாகும்.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலான உலகளாவிய வழகங்களை அவதானிக்கின்றபோது, அவை பிந்திய ஏற்பாடுகளாக இருக்கின்றன. அல்லது போதுமற்றவையாக இருக்கின்றன.

அதுட்டுமன்றி, சிறுபான்மையினரின் அடையாளங்கள் நிலையானவை என்ற கருத்தியலின் அடிப்படையில் சுயாட்சி உள்ளிட்ட அதியுச்சமானவற்றை சிறுபான்மையினருக்கு வழங்குவதன் ஊடாக நிறுவனமயப்படுத்தப்படும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

உண்மையில், சிறுபான்மையினரின் அடையாளங்கள் நெகிழ்வுத்தன்மையாவை என்ற புரிதலுடன் அடுத்தகட்டம் நோக்கிய சிந்தனைகளே தேவையாக இருக்கின்றன. 

அத்தோடு, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சமூக ஒருமைப்பாடு, அரசியல் பங்களிப்பு மற்றும் சமத்துவம், பல் அடையாளம், மனித கௌரவம், ஆகியவற்றை உள்வாங்கிய நடைமுறைச்சாத்தியமான நிறுவன செயல்பாடுச் செயற்பாடு அவசியமாகின்றது. 

எனது இந்தக் கருத்துக்கள், ஐரோப்பிய சித்தாந்தத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட சிந்தனைகளாக பார்க்க முடியும். ஆனால் அவ்வாறில்லை. சர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம், சர்வதேச அரசியலமைப்பு நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைக் கட்டமைப்புக்கள் மனித கௌரவத்தை பாதுகாப்பதற்கான முக்கிய கூறுகளாக மேலுள்ளவற்றையே முன்னிலைப்படுத்தியுள்ளன. அவை அரசியலமைப்பிலிருந்து கூட பிரிக்கமுடியாதவை என்றும் வலியுறுத்தியுள்ளன.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்