சென்னையில் பார்முலா - 4 கார் ரேஸ் இன்று தகுதி சுற்றுகளுடன் போட்டி
1 புரட்டாசி 2024 ஞாயிறு 03:43 | பார்வைகள் : 1759
சென்னையின் மையப் பகுதியில் முதன்முறையாக நடக்கும், பார்முலா - 4 ரேஸ், இன்று தகுதி சுற்றுகளுடன் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'ரேசிங் புரோமோட்டர்ஸ்' என்ற தனியார் அமைப்பு இணைந்து, 'பார்முலா - 4' ரேஸ் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றை, கடந்த 24, 25ம் தேதிகளில், சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் நடத்தின.
இரண்டாம் சுற்றுக்கான போட்டி நேற்று சென்னை, தீவுத்திடலை சுற்றியுள்ள, 3.5 கி.மீ., துார சாலையில், இரவு நேர போட்டியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டிக்காக தீவுத்திடலை சுற்றியுள்ள, அண்ணாசாலை, சிவானந்தா சாலை, காமராஜர் சாலை, கொடி மரச் சாலை ஆகியவற்றில், 19 திருப்பங்களுடன், அதிவேக நேர் வழிகளுடன், பந்தய பாதை அமைக்கப்பட்டது.
கார் பந்தயத்தை கண்டுகளிக்க, பார்வையர்களுக்கு பிரத்தேயகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டன. தனி நபர் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் அணிகளாக, போட்டி நடத்தப்படுகிறது. நேற்று மதியம், 2:30 முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி சுற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு சாகச நிகழ்ச்சிகள்; இரவு 7:00 மணி முதல், தகுதி சுற்றுகள் நடக்க இருந்தன.
ஆனால் போட்டியை நடத்துவதற்கான, எப்.ஐ.ஏ., எனப்படும், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் அனுமதி சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில், சான்றிதழை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, மதியம் 2:30 மணியில் இருந்து நடக்க இருந்த, அனைத்து நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
நேற்று மதியம் முதல் மாலை வரை மட்டும், பொது மக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாலை, 5:10 மணிக்கு, ரேஸ் நடக்க இருந்த பாதையில் ஆய்வு நடத்தப்பட்டது. பாதையில் சில மாற்றங்கள் செய்த பின், 5:43 மணிக்கு எப்.ஐ.ஏ., அனுமதி சான்றிதழ் முறையாக கிடைத்தது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டது.
சான்றிதழ் பெற தாமதமானதால், பயிற்சி சுற்றுகள் மட்டுமே நடத்தப்படும் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இரவு 7:10 மணிக்கு, அண்ணா சாலையில் போட்டி துவக்க விழா நடந்தது. அமைச்சர் உதயநிதி கொடியசைத்து, பயிற்சி சுற்றுகளை மட்டும் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.
பயிற்சி சுற்றுடன், கார்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இந்தியன் ரேசிங் லீக் பங்கேற்கும் வீரர்கள், இரு கார்களை சாய்வாக, இரு சக்கரத்தில் ஓட்டி சென்று பார்வையாளர்களை கவர்ந்தனர். இன்று தகுதி சுற்றுகளும், போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
தமிழகத்திற்கு தனி இடம்
உதயநிதி நம்பிக்கை
'சென்னையில் நடக்கும் கார் பந்தயம், உலக அளவில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும், விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரப்போவது உறுதி' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
'எக்ஸ்' வலைதளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
முதல்வர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை பங்களிப்புடன் நடத்தப்படும் சென்னை பார்மூலா - 4 ஸ்ட்ரீட் ரேஸிங் சர்க்யூட் போட்டியை, சென்னை தீவுத்திடலில் துவக்கி வைத்தேன்.
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடக்கும் சர்வதேச அளவிலான போட்டியை காண, ஏராளமான பொது மக்கள், கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்தனர். அதை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினேம்.
தெற்காசியாவில் முதன்முதலில் நடக்கும், இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலக அளவில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும், விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரப்போவது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நொந்து போன செய்தியாளர்கள்!
கார் ரேஸ் நடக்கும் பகுதிக்கு செல்வதற்காக, செய்தியாளர்களை மதியம், 12:00 மணிக்கு, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்தனர். அங்கிருந்து மாலை 3:30 மணிக்கு மெரினா அழைத்து சென்றனர். அங்கிருந்து 4:30 மணிக்கு, போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு, குடிநீர் கூட வழங்கப்படவில்லை. இரவு வரை அலைக்கழிக்கப்பட்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்த தனியார் நிறுவனத்திற்கும், அரசு அலுவலர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், பல குளறுபடிகள் ஏற்பட்டன.
நாயால் சலசலப்பு
போட்டி நடக்கும் பாதையில் சுற்றி திரிந்த நாய்களை, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். ஒரு நாய் சிவானந்தா சாலையில், ரேஸ் பாதையில் பயிறசியின்போது சுற்றியதால், வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.
ரசிகர்கள் குழப்பம்
போட்டி துவங்க தாமதமானது குறித்து, டிக்கெட் எடுத்து ஆர்வமுடன் வந்த ரசிகர்களுக்கு முறையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்று நடக்கும் தகுதி சுற்றுக்கு, புதிய டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால், ஏற்கனவே பெற்ற டிக்கெட்டுக்கு பணம் திரும்ப தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.