ஆந்திரா, தெலுங்கானாவில் கொட்டும் கனமழை; சாலைகள், பாலங்களை மூழ்கடித்த வெள்ளம்
2 புரட்டாசி 2024 திங்கள் 04:47 | பார்வைகள் : 1637
ஆந்திரா, தெலுங்கானாவில் தொடரும் கனமழையால், சார்மினார் விரைவு ரயில், கோரமண்டல் விரைவு ரயில், சென்னை-புதுடில்லி விரைவு ரயில் உள்ளிட்ட 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களில் சில நாட்களாக, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இன்றும் (செப்.,02) விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, ஏலுாரு, பாபட்லா, என்.டி.ஆர்., உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குடியிருப்புக்குள் வெள்ளம்
விஜயவாடா, அமராவதி, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது பெய்த பலத்த மழையால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது; பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக, விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 294 கிராமங்களில் இருந்து, 13,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
140 ரயில்கள் ரத்து
தொடரும் கனமழையால் சார்மினார் விரைவு ரயில், கோரமண்டல் விரைவு ரயில், சென்னை-புதுடில்லி விரைவு ரயில் உள்ளிட்ட 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், விபத்துகளில் சிக்கி, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி உறுதி
கடுமையான வெள்ளம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி, இரு மாநில முதல்வர்களிடமும் தொலைபேசியில் பேசினார். மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என உறுதியளித்தார்.