திறந்த 30 நிமிடத்தில் வணிக வளாகம் சூறையாடல் - ஒரு லட்சம் பேரின் செயல்
2 புரட்டாசி 2024 திங்கள் 10:10 | பார்வைகள் : 1895
பாகிஸ்தானில் வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் குவிந்த மக்கள், ஒரு பொருள்கூட விடாமல் அரை மணிநேரத்தில் கொள்ளையடித்துச் சென்றனர்.
கராச்சி நகரில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக ‘டிரீம் பஜார்’ என்ற வணிக வளாக திறப்பு விழாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்திய மதிப்புப்படி, பொருள்களின் ஆரம்ப விலை ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திறப்பு விழா அன்று குவிந்துள்ளனர்.
மாலை 3 மணிக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டவுடன், மக்கள் முந்தியடித்து கடைக்குள் செல்ல முயற்சித்துள்ளனர். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத பாதுகாவலர்கள், கதவுகளை அடைத்துள்ளனர்.
இருப்பினும், வணிக வளாகத்தின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் சூறையாடிச் சென்றனர்.
வெறும் அரை மணிநேரத்தில் மொத்த கடையையும் சூறையாடிய மக்கள், கடையின் மற்ற பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத வணிக வளாக நிறுவனத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தை உதவிக்கு அழைத்த போதிலும், அவர்கள் வருவதற்குள் மக்கள் கடையை சூறையாடிச் சென்றனர்.
இந்த காட்சிகளை செல்போன்களில் பதிவிட்ட சிலர் இணையத்தில் காணொலிகளை பகிர்ந்துள்ளனர்.
வெளிநாட்டில் பணிபுரியும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட தொழிலதிபர், மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை கொடுப்பதற்காக இந்த வணிக வளாகத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.