அமலாக்கத்துறை விசாரணை பாரிவேந்தருக்கு ஐகோர்ட் உத்தரவு

3 புரட்டாசி 2024 செவ்வாய் 05:07 | பார்வைகள் : 5612
மருத்துவ படிப்பில் சேர, மாணவர்களிடம், 88 கோடி ரூபாய் பெற்ற விவகாரத்தில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்., நிறுவனர் பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில், மருத்துவ படிப்பில் சேர, மாணவர்களிடம், 88 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம்., நிறுவனர் பாரிவேந்தருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் வெளியே வந்தனர். மாணவர்களிடம் பெற்ற தொகையை திருப்பி செலுத்தினர்.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த வழக்கை, நீதிமன்றம் ரத்து செய்தது. மத்திய குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து, பாரிவேந்தருக்கும், அவரது மகனுக்கும், 'சம்மன்' அனுப்பியது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாரிவேந்தர் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 88.66 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டது; வழக்கும் ரத்தாகி விட்டது.
'இந்நிலையில், 2022, 2023 ல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ''மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் நடத்தும் அறக்கட்டளையின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே, சம்மன் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கூடாது,'' என்றார்.
இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி உத்தரவிட்டனர்.
விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதால், தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1