அமெரிக்க ஓபன்: சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
3 புரட்டாசி 2024 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 1203
கிராணட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மேட்வதேவ், தரநிலை பெறாத போர்ச்சுக்கல் வீரர் நுனோர் போர்ஜஸை எதிர்கொண்டார். இதில் மெட்வதேவ் 6-0, 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்து வீரர் டிராப்பர் 6-3, 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ் மச்சாச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் அமெரிக்காவின் டாமி பால்-ஐ எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்களும் டை-பிரேக்கர் வரை சென்றது. இருந்த போதிலும் சின்னர் 7(7)-6(3), 7(7)-6(5) என கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் காலிறுதி போட்டி ஒன்றில் ஸ்வரேவ்- பிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். நாளை நடைபெறும் காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவ்- தியாபோ, டிராப்பர்- டி மினாயுர் மோதுகிறார்கள்.
பெண்களுக்கான போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், பிரேசில் வீராங்கனை ஹட்டாட் மையா காலிறுதிக்கு முன்னேறினர். ஸ்வியாடெக் ரஷிய வீராங்கனை சம்சோனோவாவை 6-4, 6-1 என எளிதில் வீழ்த்தினார்.