அவதானம்.. தொடருந்தில் பயணிக்கும்போது பொதிகள் தொடர்பில் புதிய கட்டுப்பாடு..!!
3 புரட்டாசி 2024 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 4711
தொடருந்து பயணங்களின் போது பயணிகள் கவனிக்கவேண்டிய முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை SNCF நிறுவனம் அறிவித்துள்ளது.
இம்மாதம் செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடருந்தில் பயணிப்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கும் பெட்டிகள் மாத்திரமே எடுத்துச் செல்ல முடியும். அதன்படி 70 x 90 x 50 செ.மீ அளவுடைய இரண்டு பெட்டிகளையும், 40 x 30 x 15 செ.மீ அளவுடைய ஒரு கைப்பெட்டியையும் கொண்டு செல்ல முடியும். இந்த் அளவில் அல்லது அதற்கு மேல் கொண்டுசெல்ல முற்பட்டால் குற்றப்பணமாக 50 யூரோக்கள் செலுத்த நேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TGV inOui மற்றும் Intercités ஆகிய இரு சேவைகளுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு கொண்டுவர்ரப்பட்டுள்ளது.
அதேவேளை, சில பொருட்கள், கருவிகளுக்கு விதிவிலக்கு அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்கூட்டர், குழைந்தைகளுக்கான தள்ளுவண்டிகள், இசைக்கருவிகள், தண்ணீர் சாகச துடுப்புகள், மற்றும் பனிக்கட்டி சறுக்கு விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கொண்டுசெல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் இவ்வருடத்தின் பெப்ரவரி 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 15 ஆம் திகதியில் இருந்து அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.