ஈஃபிள் கோபுரத்தில் மின்னல் தாக்கினால் என்னவாகும்..?
1 மார்கழி 2021 புதன் 10:30 | பார்வைகள் : 22301
ஈஃபிள் கோபுரத்தில் நீங்கள் நின்றிருக்கும் போது மின்னல் கோபுரத்தில் தாக்கினால் என்னாகும்..? இந்த கேள்வி உங்களில் பலருக்கு தோன்றியிருக்கலாம்.
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இந்த கேள்விக்கு பதிலை தேடலாம்.
ஈஃபிள் கோபுரம் மீது மின்னல் தாக்குவது இயல்பு தான். வருடத்துக்கு ஐந்து சம்பவங்களாவது இடம்பெற்று விடும். ஈஃபிள் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர் கூட உண்டு. ஆனால் மின்னல் தாக்கி உயிரிழந்தவர் என ஒருவர் கூட இல்லை.
‘இரும்பு கோபுரம் கட்டுகின்றோமே. மின்னல் தாக்கினால் காக்காய் குருவி கூட மிஞ்சாது!’ என உணர்ந்துகொண்ட Gustave Eiffel, ஈஃபிள் கோபுரத்தை கட்டும் போதே அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.
மின்னல் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தை உள்வாங்குவதற்காக கோபுரத்தின் உச்சியில் நான்கு இராட்சத கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கம்பிகளின் இன்னொரு பகுதி நேரே கோபுரத்தின் கீழ் சென்றுவிடுகின்றன. இதனால் மின்னலினால் ஏற்படும் மின்சாரம் அனைத்தையும் இந்த கம்பிகள் உள் இழுத்து, நிலத்துக்கு கீழ் கொண்டுசென்று மண்ணோடு ஐக்கியமாகிவிடும்.
மூன்றாவது உச்சி கோபுரத்தில் இருக்கும் உங்களுக்கு பெரும் ஆபத்து எதுவுமில்லை. பயத்தில் மயங்கி விழாமல் இருந்தால் சரி.
ஆனால் மழையின் போதும், பனிப்பொழியும் போதும் ஈஃபிள் கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லையே அது ஏன்..?
அது ஏனென்றால்… நீங்கள் கொஞ்சம் அவதானமில்லாமல் வழுக்கி விட கூடும் என்பதாலும்… புகை மூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலுமேயே தவிர. வேறொன்றும் இல்லை.
மழை பெய்யும் போது ஐஸ்கிரீம் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருப்பதுபோல்… மழை பெய்தாலும் நான் ஈஃபிளுக்குச் செல்வேன் என நீங்கள் சொன்னால்… தப்பேதுமில்லை. சென்றுவாருங்கள்..!