ஈபிள் கோபுரத்தை இரும்புக்கு விற்றவர்!
25 கார்த்திகை 2021 வியாழன் 10:30 | பார்வைகள் : 22982
ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி எத்தனை எத்தனையோ கதைகள் உள்ளன. நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் ‘ஈஃபிளை திருமணம் செய்துகொண்ட பெண்’ குறித்து பார்த்தோம் அல்லவா, இன்றை ‘பி.பு’ வில் ஒரு நூதன சம்பவம் குறித்து பார்க்கலாம்.
ஒருவர் என்ன செய்திருக்கின்றார்… ஈஃபிள் கோபுரத்தை விற்றுவிட்டு, நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார்.
மேற்படி நபர், பரிசில் வசிக்கும் ‘இரும்பு பொருட்கள்’ விற்பனையாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். அவர்களிடம்… ‘அரசால் ஈஃபிள் கோபுரத்தை பராமரிக்க முடியவில்லை. எனவே அதனை விற்றுவிட தீர்மானித்துள்ளது.’ என கதை அளந்துள்ளார்.
அத்தோடு, ‘இதனை மிகவும் இரகசியமாக அரசு செயற்படுத்துகின்றது. ஏனென்றால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால்..’ எனவும் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த ‘கதையை’ ஒருவர் நம்பினார். அவரின் பெயர் André Poisson. ஈஃபிள் கோபுரத்தை கம்பி கம்பியாக பிரித்து அதனை வாகனத்தில் ஏற்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொண்டு சென்றுவிடவேண்டும், முற்பனமாக முழுத்தொகையையும் கொடுத்துவிடவேண்டும் என தெரிவித்து, போலியான ஆவணங்களும் தயாரித்து ஒப்பந்தம் போட்டு, பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்டவர் என்ன செய்தார்..? நாட்டை விட்டு தப்பி ஓடு ஒஸ்ரியாவுக்குச் சென்றார்.
ஆனால் சம்பவம் இங்கு நிறைவடையவில்லை. சில வருடங்களின் பின்னர் அந்த ‘பலே கில்லாடி’ மீண்டும் பரிசுக்கு திரும்பினார். இப்போது முன்னர் செய்த அதே ‘ஈஃபிள் கோபுர விற்பனை’ திட்டத்தை மீண்டும் செயற்படுத்தினார்.
ஆனால் அதற்குள்ளாக காவல்துறை அவரை கையும் களவுமாக பிடித்தது.
‘அரசால் பராமரிக்கமுடியவில்லை. அதனால் தான் அரசு விற்பனை செய்கின்றது’ என அவர் கதை விட்டார் அல்லவா.. உண்மையில் ஈஃபிள் கோபுரத்தை பராமரிப்பது அரசு அல்ல!